`ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும்...’ - சிஎஸ்கே வீரர் தாஹிர் தட்டிவிட்ட அஜித்தின் பஞ்ச் ட்வீட் | imran tahir tweet regarding csk victory

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (11/05/2019)

கடைசி தொடர்பு:11:27 (11/05/2019)

`ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும்...’ - சிஎஸ்கே வீரர் தாஹிர் தட்டிவிட்ட அஜித்தின் பஞ்ச் ட்வீட்

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியை இம்ரான் தாஹிர் அஜித்குமார் வசனம்மூலம் கொண்டாடியுள்ளார்.

இம்ரான் தாஹிர்

ஜெயிச்சா நேரடியாக நீங்க ஃபைனல்ஸ். இல்லனா இன்னொரு பெரிய ரூட். இதுல எது உங்க சாய்ஸ்னு கேட்டா, சென்னை அணிக்கு இரண்டாவது ரூட் தான் ஆஸ்தானமானது. அப்படித்தான், `நீங்க முதல்ல முன்னாடி போங்க; பின்னாடியே வர்றோம்’ அப்படினு மும்பையுடனான மேட்சில் ஜஸ்ட் ஸ்லிப் ஆகி தோல்வியைத் தழுவினர். அடுத்து, டெல்லியுடனான நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று, ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது சி.எஸ்.கே.

இம்ரான்

`இது எங்க வழக்கமான ரூட் தான்’ என்று பேட்டியளித்துள்ளார், அணியின் கேப்டன் தோனி. நேற்றைய ஆட்டத்தில், சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிதான இலக்கை 4 விக்கெட்டு இழப்புக்கு 19 ஓவர்களிலே முடித்து, வெற்றியைத் தனதாக்கியது சென்னை. விளையாடிய 10 சீஸனில் 8-வது முறையாக சென்னை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. அதே சமயம், டெல்லியின் `கோப்பை’ கனவு நனவாகாமல்போனது. இந்நிலையில், சென்னையின் வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.

தாஹிர்

ஆட்டம் முடிந்த பின், எப்போதும் வித்தியாசமாக ட்வீட் போடுவது `புலவர்’ ஹர்பஜன் சிங்குக்கு வழக்கம். தற்போது, அந்த இடத்தை இம்ரான் தாஹிர் நிரப்பிவருகிறார். நேற்றைய ஆட்டம்குறித்து தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``எங்களோட ஐபிஎல் வாழ்க்கைல ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும், ஏன் ஒவ்வொரு பாலும், நாங்களா செதுக்குனது டா, எடுடா வண்டிய, போடுடா விசில” என்று பதிவிட்டுள்ளார்.

சி.எஸ்.கே ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் தாஹிரின் இந்த ட்வீட்டை ஷேர் செய்து வருகின்றனர். அதேபோல ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு@IPL  சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK” என்று பதிவிட்டுள்ளார்.நாளை ஆட்டம் ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்த வருட சாம்பியன் சென்னையா, மும்பையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.