``அவர்களால்தான் நாங்கள் இறுதிப் போட்டியில் இருக்கிறோம்!” - நன்றி தெரிவித்த தோனி #CSKvDC | Dhoni talks about Current IPL tournament

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (11/05/2019)

கடைசி தொடர்பு:11:55 (11/05/2019)

``அவர்களால்தான் நாங்கள் இறுதிப் போட்டியில் இருக்கிறோம்!” - நன்றி தெரிவித்த தோனி #CSKvDC

10 ஐபிஎல் தொடர்களில் 8 முறை ஃபைனல், சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாளை ஹைதராபாத் மைதானத்தில்,  4 -வது முறையாக மோதவுள்ளன தோனியின் சென்னை மற்றும் ரோகித்தின் மும்பை அணிகள்.  அதுமட்டு அல்லாமல், ஐபிஎல் தொடர்களின் இறுதிப் போட்டியில், இவ்விரண்டு அணிகளும் மோதுவது இது 4 -வது முறை. 

தோனி

சென்னை அணியின் வெற்றிக்குப் பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி,  ``எங்கள் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில், சில ரன்களை வழங்கினோம். சில கேட்சுகளை விக்கெட்டுகளாக மாற்றத் தவறினோம். ஆனால், முக முக்கியமானது அவற்றிலிருந்து மீண்டு வருவது. 

தாஹிர்

140+ ரன்கள் என்ற இலக்கை மிகச் சிறப்பாக சேஸ் செய்தோம். போட்டி 7.30 மணிக்கு தொடங்குவது ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் ரன் எடுக்க சற்று சிரமமாக இருந்தது. ஸ்பின்னர்கள் அதன் காரணமாகத்தான் அதிகமாகப் பந்தை சுழற்ற முடிந்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப்  பந்துவீசினர். அவர்கள், டெல்லி அணியை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். டெல்லியின் பேட்டிங் வலிமையானது. அவர்கள், அணியில் அதிக இடக்கை பேட்ஸ்மேன்கள் இருந்தனர். நாங்கள் அவர்களைக் கட்டுப்படுத்த, இடக்கை சுழற்பந்துவீச்சாளரைக் கொண்டிருந்தோம். விக்கெட் எடுக்கும் நேரம் என்பது மிக முக்கியமானது. குறைந்த இடைவெளியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை அவர்கள் இழந்ததால், புதிதாக வரும் வீரர்களுக்கு அதிரடியாக ஆட சிரமமாக இருக்கும். அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள்” என்றார். 

சென்னை அணி

சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தோனி,  ``கேப்டனாக நான் அவர்களை உரிய நேரத்தில் பந்துவீச மட்டும் அழைக்க முடியும்.  ஆனால், பந்து அவர்கள் கையில் சென்றபிறகு, அவர்கள்தான் அதை சரியாகச் செய்ய வேண்டும். எங்கள் ஸ்பின்னர்ஸ் அவர்களின் அனுபவத்தைக்கொண்டு விளையாடினர் என்றுதான் சொல்ல வேண்டும். அதையும் தாண்டி, வீரர்களின் ஃபிட்னஸ் குறித்து சொல்ல வேண்டும். சீனியர் வீரர்களான அவர்கள், சுமார் 50 நாள்கள் அதிக வெப்பம்கொண்ட ஆடுகளங்களில் விளையாடியுள்ளார். இதில் ஒரு நல்ல விஷயம், பெரிதாக யாருக்கும் இதுவரை காயம் இல்லாமல் கடந்துவந்துள்ளோம். அதற்காகவே, பந்துவீச்சாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் அணி இன்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

வாட்சன்

இதுபோன்ற நாக் அவுட் போட்டிகளில், எப்போது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்பேன். தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்றுவிட்டால், பின்னர் ஆட்டத்தை சாதகமாக முடிப்பது எளிதாக இருக்கும்” என்றார்.