`கடைசி ஓவர் கலாட்டா; அசத்திய பௌலர்கள்!' - சி.எஸ்.கேவுக்கு 150 ரன்கள் இலக்கு #MIvCSK | Mumbai Indians 150 scores runs against chennai super kings in ipl final

வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (12/05/2019)

கடைசி தொடர்பு:08:38 (13/05/2019)

`கடைசி ஓவர் கலாட்டா; அசத்திய பௌலர்கள்!' - சி.எஸ்.கேவுக்கு 150 ரன்கள் இலக்கு #MIvCSK

ஐபிஎல் ஃபைனலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்துள்ளது.

ஐபிஎல்

ஒன்றரை மாத காலமாக நடந்து வந்த ஐபிஎல் 12வது சீஸன் இறுதிக்கட்டத்தைத் தொட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஃபைனலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரு மாற்றமாக ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக மிட்ச் மெக்லேனேகன் இடம்பிடித்துள்ளார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 

சென்னை சூப்பர்கிங்ஸ்

அதன்படி தொடக்க வீரர்களாக டி காக்கும், ரோஹித் ஷர்மாவும் இறங்கினர். ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது இந்த ஜோடி. ஐந்து ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த ஜோடி ரன் ரட்டை 10-க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர். 4 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்த டி காக் முதல் ஆளாக ஷர்துல் தாகூர் பந்தில் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே ரோஹித்தும் தோனியிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தார். ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா இந்த முறை கைகொடுக்கத் தவறினார். மறுமுனையில் மெதுவாக ஆடி வந்த இஷான் கிஷானும் 23 ரன்களில் வெளியேற 15வது ஓவரில் இருந்து ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்தனர் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு இணை. 

சென்னை சூப்பர்கிங்ஸ்

ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரெய்னா தயவால் முதல் கண்டத்தில் இருந்து தப்பித்த பாண்டியா 16 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி ஓவரில் பொல்லார்டு சொதப்ப 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்டு 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் ஆறு பந்துகள் டாட் பாலாக அமைந்தது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். இதில் பவுண்டரி அடிக்க முயன்று ஒரு ரன்கள் கூட எடுக்காமல் முதல்  மூன்று பந்துகளையும் பொல்லார்டு வீணாக்கினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க