``என் இதயம் நொறுங்கிவிட்டது; விடைபெறுகிறேன்!” - கலங்கிய ஹர்பஜன் சிங் | Harbhajan singh about the final match and says thanks to fans

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (13/05/2019)

கடைசி தொடர்பு:13:49 (13/05/2019)

``என் இதயம் நொறுங்கிவிட்டது; விடைபெறுகிறேன்!” - கலங்கிய ஹர்பஜன் சிங்

எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பக்கம் இன்று சோகமாக இருக்கிறது. நொறுங்கிய இதயத்துடன் அவர் சென்னையின் தோல்வி குறித்து பதிவிட்டிருக்கிறார். 

ஹர்பஜன்

ஐபிஎல் 2019 -ம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ். 4 -வது முறையாகக் கோப்பை வெல்லும் எனச் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசிப் பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசிப் பந்தில் மும்பை வீரர்களின் அப்பீலுக்கு நடுவர் அவுட் என கையைத் தூக்க கேமெரா சென்னை வீரர்கள் பக்கம் திரும்பியது. அனைவரும் அதிர்ச்சியாக இருக்க, ஹர்பஜன் சற்று அதிக விரக்தியுடன் இருந்தார். கோபத்தில் பேட்டால் வேகமாக அடித்துவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தார். 

சென்னை

எப்படியும் வென்றுவிடுவோம் என அவர் எண்ணியிருக்கக் கூடும். அதன் எதிர்வினையாகத்தான் அந்த விரக்தி வெளியானது. எப்போதும் கலகலப்பான ட்வீட் மூலம் ரசிகர்களின் ஹார்ட்ஸை வெல்லும் ஹர்பஜன் சற்று நொறுங்கிய இதயத்துடன் இன்று காலை ட்வீட் செய்திருக்கிறார். 

ட்வீட்

தனது முதலாவது ட்வீட்டில், ``நேற்றைய போட்டியின் முடிவு எனது இதயத்தை நொறுக்கிவிட்டது. வேறு என்ன சொல்ல எனத் தெரியவில்லை. இந்த சீசன் முழுவதும் எங்களை சப்போர்ட் பண்ணின அனைவருக்கும் நன்றி. 4 -வது முறையாகக் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துகள். இப்போதும் நாங்கள் எப்படித் தோற்றோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் ட்வீட்

பின்னர் தமிழில் ட்வீட் செய்த அவர், ``தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், ஏதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல, அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழச் செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளையாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்” - என பதிவிட்டுள்ளார். 
தோற்றாலும் ஜெயித்தாலும் நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.