`இக்கட்டான சூழ்நிலைகளை இப்படித்தான் சமாளிக்கிறேன்!’ - டெத் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா | Sachin praises bumrah as the worlds best bowler

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (13/05/2019)

கடைசி தொடர்பு:14:51 (13/05/2019)

`இக்கட்டான சூழ்நிலைகளை இப்படித்தான் சமாளிக்கிறேன்!’ - டெத் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா

`இக்கட்டான சூழ்நிலைகளை இப்படித்தான் சமாளிக்கிறேன்!’ - டெத் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா

2019 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ், நான்காவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. பரபரப்பான இறுதிப் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசிப் பந்து வரை பெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு போராடியது.

மும்பை இந்தியன்ஸ்

149 ரன் இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, வாட்சன் மட்டுமே ஆறுதல். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், கடைசி நேரப் பரபரப்பு 18-வது ஓவரிலேயே தொடங்கியது. 18 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில், க்ருணால் பாண்டியா ஓவரில் ட்ரிபிள் சிக்சர்களை வெளுத்தார் வாட்சன். இந்த ஓவரில் கிடைத்த 20 ரன்களால், கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டன. ரன்களை வாரி வழங்கிய க்ருணாலின் ஓவரை சரிக்கட்ட 19-வது ஓவரை வீசினார் பும்ரா. வாட் எ ப்யூட்டி! பவுண்டரி, சிக்சர்கள் ஏதுவுமின்றி, வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பிராவோவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் மட்டுமல்லாது, இந்த ஐபிஎல் தொடரில் பும்ராவின் சிறப்பான ஆட்டத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

பும்ரா

இந்த ஐபிஎல் தொடரில், 16 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, 6.63 பெளலிங் எகானமி வைத்துள்ளார். ஐபிஎல்லைத் தொடர்ந்து உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி குறித்துப் பேசிய சச்சின் டெண்டுல்கர், ``மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக, பந்துவீச்சாளர்களின் செயல்பாடு அருமையாக இருந்தது. கடைசி ஓவரில் மலிங்கா அசத்தினார். அதேபோல ராகுல் சஹர், பும்ராவின் பந்துவீச்சு குறித்தும் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவர்களின் பெளலிங் மிகச்சிறப்பு. மேலும், இதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்போதைய நிலைமையில், பும்ராதான் உலகின் சிறந்த பெளலர். இன்னும் சிறப்பான பல ஆட்டங்கள் பும்ராவிடம் இருந்து வர உள்ளன" என்று பும்ராவைப் புகழ்ந்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.

சச்சின் - யுவராஜ்

டெத் பெளலர் ஸ்பெஷலிஸ்டாக திகழ்ந்து வரும் பும்ரா, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அசால்டாக கடந்துவிடுகிறார். ``இந்த ஓவரில் என்ன நடக்கும் என்பதைவிட, இந்தப் பந்தை எப்படி வீசவேண்டும் என்பதிலே என் முழுக் கவனம் இருக்கும். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பந்தும் முக்கியமானது. ஒரு சமயத்தில், ஒரு பந்தின் மீது மட்டுமே கவனம் கொள்வேன். அதனால், இக்கட்டான சூழ்நிலைகளையும் சமாளிக்க முடிகிறது" என்றார் பும்ரா. வாழ்த்துகள் பும்ரா, வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் ஓவர், அடுத்து உலகக்கோப்பை வெயிட்டிங் பும்ரா. அடிச்சு தூக்கவும்... கோப்பையை..!  பும்ராவின் பெளலிங்கில் உங்களைக் கவர்ந்த விஷயங்களை கமென்டில் பதிவு செய்யவும்.