``வாட்சன் காலில் ரத்தக்கறையைக் கவனித்தீர்களா?"- இன்ஸ்டாகிராமில் படத்துடன் கேள்வியெழுப்பிய ஹர்பஜன்! | can you guys see blood on watson knee

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/05/2019)

கடைசி தொடர்பு:07:38 (14/05/2019)

``வாட்சன் காலில் ரத்தக்கறையைக் கவனித்தீர்களா?"- இன்ஸ்டாகிராமில் படத்துடன் கேள்வியெழுப்பிய ஹர்பஜன்!

வாட்சன்

வாட்சனை எதுக்கு பாஸ் மேட்ச்ல வச்சிருக்காங்க. ஐபிஎல் ஃபைனல் போட்டி வரை இந்தக் கேள்வி இருந்தது. இந்தக் கேள்விக்கு ஃபைனலில் பதிலடிகொடுத்தார் வாட்சன். போராட்ட குணமே ஒரு போர் வீரனுக்கான அடையாளம். வாட்சன் களத்தில் இருக்கும் வரை போராடிக்கொண்டே இருந்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்டிக்கொண்டிருக்க, வாட்சன் வெற்றியை நோக்கிப் பயணப்பட்டார். சில தருணங்களில் அதிர்ஷ்டமும் வாட்சனுக்குக் கைகொடுத்தது. சில கேட்ச்களை மும்பை வீரர்கள் கோட்டைவிடவும் செய்தனர். ஃபிட்னஸ் பிரச்னையாக இருந்தாலும் நாம் விளையாடிக்கொண்டிருப்பது ஃபைனல். இந்த நாளை தவறவிடக் கூடாது என விளையாடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் களமிறங்கிய வீரர், கடைசி ஓவர் வரை களத்தில் இருந்தால் எதிரணிக்கு பயம் இருக்கத்தான் செய்யும். மும்பை அணியிடம் அந்தப் பயம் இருந்தது. கடைசியில் விதி விளையாடியது. ரன் அவுட்டில் வீழ்ந்தார் வாட்சன்.  போட்டி கைமாறியது... மும்பை கோப்பையை ஏந்தியது.

ஐபிஎல்

கோப்பையை இழந்தாலும் வாட்சனின் போராட்ட குணத்தைப் பாராட்டி சி.எஸ்.கே ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருந்தனர். வாட்சனின் ஒரு புகைப்படத்தில், அவரது காலில் ரத்தம் இருப்பதுபோன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இந்தப் புகைப்படம்குறித்து ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ``நேற்றைய போட்டியின்போது, வாட்சன் ரன் ஓடும்போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசிவரை விளையாடியுள்ளார். போட்டிக்குப் பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.