``தோனியின் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது!” - குல்தீப் யாதவ்  | kuldeep yadav speaks about dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:06 (14/05/2019)

``தோனியின் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது!” - குல்தீப் யாதவ் 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்தியாவுக்கு இரண்டு முறை உலகக்கோப்பையைப்(2007 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 -ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை) பெற்றுத் தந்தவர். பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்தும் விதமும் களத்தில் அவர் எடுக்கும் பல வித்தியாசமான முடிவுகளும் பலன் தரும்போது ரசிகர்கள் சிலாகித்துவிடுவார்கள். `சொல்லி அடித்த தோனி’ என மீம்ஸ்கள் பறக்கும். அவரது கிரிக்கெட் அறிவு குறித்து பல்வேறு முன்னணி மற்றும் முன்னாள் வீரர்கள் புகழ்ந்துள்ளனர்.  

தோனி

அவரால் எதிரணி வீரர்களின் செயல்பாடுகளைச் சிறப்பாகக் கணிக்க முடியும் எனப் பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் தோனியும் மனிதர்தானே. அவர் தவறு செய்யாமல் இருக்க முடியுமா என நம்மில் பலருக்கும் கேள்வி இருக்கும். இப்படி ஒரு கேள்விதான் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முன் வைக்கப்பட்டது. 

குல்தீப் யாதவ்

தோனி, போட்டியின்போது பலமுறை பந்துவீச்சாளர்களுக்கு டிப்ஸ் வழங்குவார். நீங்கள் எப்போதாவது தோனி வழங்கும் டிப்ஸை கேள்வி கேட்டதுண்டா என்ற கேள்வி குல்தீப் முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ``பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால், அவரிடம் அதைச் சொல்ல முடியாது” என்றார் நகைச்சுவையாக. 

தொடர்ந்து பேசியவர், ``அவர் சும்மா வந்து ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார். மிக குறைவாகத்தான் பேசுவார். எதாவது சில டிப்ஸ் வழங்க வேண்டும் என அவர் எண்ணினால் மட்டுமே வந்து பேசுவார்” என்றார். குல்தீப் யாதவ்வின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர் இந்தக் கருத்தை நகைச்சுவையாகத்தான் சொன்னார். குற்றச்சாட்டாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.