`அணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது!' - சி.எஸ்.கே பயிற்சியாளர் ப்ளமிங் | CSK coach Fleming hints at changes in ‘ageing’ Chennai Super Kings team

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/05/2019)

கடைசி தொடர்பு:17:20 (14/05/2019)

`அணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது!' - சி.எஸ்.கே பயிற்சியாளர் ப்ளமிங்

ப்ளெமிங்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் வாட்சன் க்ளாஸ் பர்ஃபார்மன்ஸ் சென்னை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்ட வாட்சன் மட்டும் ஒரு போர் வீரனைப்போலக் கடைசி வரை போராடிக்கொண்டிருந்தார். இறுதி ஓவரில் வாட்சன் ரன்-அவுட் ஆனார். 2 வருடத் தடைக்குப் பின்னர் வந்த சென்னை அணிக்குக் கடந்தாண்டு இறுதிப்போட்டியில் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தால் கோப்பையைப் பெற்றுத்தந்தார். இந்த முறையும் அப்படி நடக்குமா என ஏங்கிய சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதிஓவரில் ரன் அவுட்டில் வீழ்ந்தார் வாட்சன். போட்டி கைமாறியது நான்காவது முறையாக மும்பை அணி கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் வாட்சனின் அக்ரஸிவ் பேட்டிங், தோனி ரன்-அவுட், சிஎஸ்கே மிடில் ஆர்டர் சொதப்பல், ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகள் எனப் பல விஷயங்கள் குறித்து சி.எஸ்.கே பயிற்சியாளர் ப்ளெமிங் பேசியுள்ளார்.

தோனி

தோனியின் சர்ச்சையான ரன் அவுட் குறித்துப் பேசியவர், ``ஐபிஎல் ஃபைனலில் தோனியின் ரன்அவுட் திருப்புமுனையாக அமைந்தது. இந்த வருடத்தில் தோனி சிறப்பாக விளையாடியுள்ளார். அந்த விக்கெட்டுக்கு நடுவர்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். தோனியின் நிதானம் தான் அவரை மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. அந்த விக்கெட் இரண்டு தாக்கங்களை ஏற்படுத்தியது. எங்களை இலக்கை எட்டவிடாமல் செய்தது, மும்பை அணிக்குக் கோப்பையைக் கொடுத்தது"என்றார்.

ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு ஆட்டத்தின் போது சேப்பாக்கம் மைதானம் குறித்து விமர்சனம் எழுந்தது. இதுபோன்ற பிட்ச்களில் விளையாட விரும்பவில்லை என தோனியே பேசியிருந்தார். இதை ப்ளமிங் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். ``இந்த வருடம் எங்கள் ஹோம் க்ரவுண்டான சேப்பாக்கம் கடுமையாக இருந்தது. பிட்ச் கணிக்க முடியாத அளவில் இருந்தது மட்டுமல்லாமல்  விளையாடவும் கடுமையாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை அணியின் பேட்டிங் இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. தோனிதான் சி.எஸ்.கேவில் ஃபார்மில் இருந்தார். கடந்தாண்டு பேட்டிங்கில் மிரட்டிய ராயுடு, இந்த முறை சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. ஃபார்ம், ஃபிட்னஸ் பிரச்னையால் தவித்து வந்த வாட்சன் ப்ளே-ஆப் சமயத்தில் தான் இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பினார். சி.எஸ்.கேவின் பேட்டிங் குறித்துப் பேசிய ப்ளமிங், ``இந்த முறை எங்களின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. பந்துவீச்சில் பெரிதாக பிரச்னை இல்லை. பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டும். எங்கள் அணி வயதான வீரர்களைக் கொண்ட அணி என எங்களுக்குத் தெரியும். வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

வாட்சன்

கடந்த முறை கோப்பையை வென்றோம். தற்போது ஃபைனலில் விளையாடியுள்ளோம், இந்த இரண்டு வருடங்களும் சிறப்பானதுதான். மற்ற அணிகளில் திறமையான இளம்வீரர்கள் உள்ளனர். எங்கள் அணியிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போது தோனி உலகக்கோப்பை தொடரில் உள்ளார். அவர் திரும்பியதும் அணி நிர்வாகம் மற்றும் தோனி ஆகியோர் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வார்கள். இளம்வீரர்கள் அணியில் இருக்கும் போது அது உத்வேகத்தைக் கொடுக்கும்,.அப்போது தான் அணியில் சமநிலை நிலவும்.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா சிறப்பாகப் பந்துவீசினார். வாட்சன் நீண்ட நேரம் களத்தில் இருந்தார். அவர் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். வாட்சனிடமிருந்து ஒரு சிக்ஸரை எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது'' என்றார்.