வெறுங்காலில் ஆடியவர்கள் இப்போ இந்திய அணியில்... கூடைப்பந்தில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி! | Coimbatore Government school students rocking in Basket ball

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (14/05/2019)

கடைசி தொடர்பு:19:57 (14/05/2019)

வெறுங்காலில் ஆடியவர்கள் இப்போ இந்திய அணியில்... கூடைப்பந்தில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி!

"இளம் இந்தியா அணிக்கு விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவிகளாலும் சாதிக்க முடியும். எங்களது பள்ளி மைதானம், மோசமான நிலையில் இருக்கிறது. தனியார் பள்ளி மைதானத்தைப்போல எங்கள் பள்ளி மைதானத்தையும் மேம்படுத்திக் கொடுங்கள். அதுபோதும்!”

வெறுங்காலில் ஆடியவர்கள் இப்போ இந்திய அணியில்... கூடைப்பந்தில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி!

சாதி, மதம் கடந்து மக்களை இணைக்கும் ஒரு விஷயம், விளையாட்டு. ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் ஒருவர், விளையாட்டுத் துறையில் சாதிப்பது எளிதான காரியமல்ல. அப்படிப்பட்ட ஏழை மாணவர்களுக்கு, கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சி வழங்கி அசத்திவருகிறார் கோவையைச் சேர்ந்த செபாஸ்டியன் பிரபு.

கோவை கால்நடை மருத்துவமனை அருகே, ஸ்டேம்ப் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் கடையை  நடத்திவருகிறார் செபாஸ்டியன் பிரபு. கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியை முறையாகக் கற்றிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கூடைப்பந்து குறித்து தெரியாத கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, `இதுதான் கூடைப்பந்து' என்று அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, தற்போது மகிழ்ச்சியாக கூடைப்பந்து விளையாடி, வெற்றிகளைக் குவித்துவருகின்றனர் இந்த அரசுப் பள்ளி மாணவிகள். 

அரசுப் பள்ளி மாணவிகள்

சாப்பாட்டுக்கே சிரமமாக இருக்கும் வீட்டில், விளையாட்டைப் பகட்டாய் நினைப்பது இயல்புதானே! அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு நம்பிக்கையளித்தும், குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தும், பொருளாதாரரீதியாக உதவி செய்தும் அந்த ஏழை மாணவிகளை எதிர்நீச்சல் போடப் பழக்கியிருக்கிறார் பிரபு. இவரின் விடாமுயற்சியும், குழந்தைகளின் கடின உழைப்புமே இந்தப் பள்ளியைப் பற்றி தற்போது தமிழக அளவில் பேசவைத்திருக்கின்றன.

இந்தப் பள்ளியில் 9-ம் வகுப்புக்குச் செல்லும் ஸ்ரீ லட்சுமி என்கிற மாணவி, இமாசலப்பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான பெண்களுக்கான சப்-ஜூனியர் கூடைப்பந்துப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி, இரண்டாம் இடம் பிடித்து சாதனை  படைத்துள்ளார். மேலும், இந்தப் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகள், மாவட்டங்களுக்கு இடையேயான சப்-ஜூனியர் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் விளையாடி, கோவைக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். கோவை மாவட்ட அளவிலும் கூடைப்பந்து போட்டிகளில் இந்தப் பள்ளியின் தொடர் வெற்றி, மாணவிகளிடம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

செபாஸ்டியன் பிரபு

பயிற்சி குறித்தும், பள்ளி மாணவிகளின் ஆர்வம் குறித்தும் பயிற்சியாளர் செபாஸ்டியன் பிரபுவிடம் கேட்டபோது, ``25 ஆண்டுகள் கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சி எடுத்தேன். குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை கொடுத்து பயிற்சிக்கு வரவழைத்தேன். வெறும்காலில் விளையாடத் தொடங்கினார்கள். வெறித்தனமாக விளையாடினார்கள். உபகரணங்கள் வந்தவுடன் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆரம்பத்தில் அரசுப் பள்ளி என்று அலட்சியமாகப் பார்த்தனர். தற்போது துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விளையாடுவதைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் கூடுகிறது. பல இன்னல்களைக் கடந்து வந்தாலும், அரசுப் பள்ளி மாணவிகளாலும் சாதிக்க முடியும் என நிரூபித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கோவை மாவட்டத்திலிருந்து, தமிழக அணிக்காகத் தேர்வான ஒரே அரசுப் பள்ளி மாணவி ஶ்ரீ லட்சுமிதான். விமானத்தைக் கீழே இருந்து பார்த்த மாணவிகள், தற்போது அதில் பயணம் செய்து விளையாடுவது அவர்களது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. ஶ்ரீ லட்சுமி, தற்போது இளம் இந்தியா அணிக்காக விளையாட இருக்கிறார். ஜூனியர் என்.பி.ஏ டெல்லியில் நடத்திய பயிற்சி முகாமில், துணி வணிகர் சங்க அரசுப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும், இவர்கள் அமெரிக்கா சென்று பயிற்சி பெற, என்.பி.ஏ சார்பாக பாஸ்போர்ட் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசுப் பள்ளி மாணவிகள் சர்வதேச அளவில் சாதிக்கவுள்ளனர்” என்றார் பெருமையாக. 

ஶ்ரீ லட்சுமி

ஶ்ரீ லட்சுமி

பெற்ற பயிற்சிகள் குறித்தும், பெற்றுக்கொண்டிருக்கும் பாராட்டுகள் குறித்தும் பெருமை பொங்கப் பேசிய மாணவி ஶ்ரீ லட்சுமி, ஒரு வேண்டுகோளை வைத்தார். ``இளம் இந்தியா அணிக்கு விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவிகளாலும் சாதிக்க முடியும். எங்களது பள்ளி மைதானம், மோசமான நிலையில் இருக்கிறது. தனியார் பள்ளி மைதானத்தைப்போல எங்கள் பள்ளி மைதானத்தையும் மேம்படுத்திக் கொடுங்கள். அதுபோதும்” என்று முடித்தார்.

விளையாட்டு இந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்க்கையையே கொடுத்துள்ளது. அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்