``அது எப்படி பாஸ், ஐ.சி.சி தொடர்ல சிறப்பாக ஆடுறீங்க?” - தவானின் `கூல்’ பதில் | I am confident that I will have another good ICC tournament says Shikhar Dhawan

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (15/05/2019)

கடைசி தொடர்பு:09:09 (15/05/2019)

``அது எப்படி பாஸ், ஐ.சி.சி தொடர்ல சிறப்பாக ஆடுறீங்க?” - தவானின் `கூல்’ பதில்

உலகக்கோப்பை போட்டிகள் குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பேசியுள்ளார்.

ஷிகர் தவான்

ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது. இன்னும் 15 நாள்களில் உலகக்கோப்பை தொடங்கவுள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் அதன்பக்கம் திரும்பியுள்ளது. இந்த முறை உலகக்கோப்பை வெல்லும் அணிகள் ரேஸில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியில் அதிகம் ஜொலிக்கும் வீரராக எதிர்பார்க்கப்படுவது ஷிகர் தவான். ஐ.சி.சி தொடர்கள் என்றாலே தொடர்ந்து நன்றாக விளையாடி வரும் இவர், இந்தமுறையும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். அதற்கேற்றார்போலவே அவரது ஐபிஎல் ஆட்டங்களும் அமைந்தன. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சீனியர் என்ற வகையில் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையே உலகக்கோப்பையில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். 

தவான்

இந்த நிலையில், உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பி.டி.ஐ செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார் ஷிகர் தவான். அதில், ஐ.சி.சி தொடர்கள் என்றாலே எப்படி சிறப்பாக விளையாடுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ``எல்லாரும் அப்படிதான் சொல்கிறார்கள். ஐ.சி.சி தொடர்கள் என்று வந்துவிட்டாலே எனது ரெக்கார்டுகள் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனது நோக்கம் எப்போதும் ஒன்றுதான். ஐ.சி.சி போட்டிகள் என்பதற்காக மட்டுமல்ல எல்லா போட்டிகளிலும் நூறு சதவிகித உழைப்பைக் கொடுப்பேன். எப்போதும் எனது கவனம் அதை நோக்கித்தான் இருக்கும். இருப்பினும் இன்னொரு ஐ.சி.சி தொடர் வருகிறது. இதிலும் நன்றாக விளையாடுவேன் என நம்பிக்கையாக உள்ளேன்" எனப் பேசும் அவர், உலகக்கோப்பைக்கான பிரஷர் ஏதும் இருக்கிறதா என்பதற்கு, ``நான் அப்படி பிரஷர் பற்றி கவலைப்படுகிற பையன் கிடையாது. 

தவான்

எனக்கு அதை சமாளிக்கிற திறமை இருக்கிறது. அதேபோல் விமர்சனமும். விமர்சனம் செய்கிறவர்கள் அவர்கள் வேலையைச் செய்கிறார்கள். என்னைப் பற்றி அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒன்று நான் டிவி பார்க்க வேண்டும் அல்லது பேப்பர் படிக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்கிற ஆள் நான் கிடையாது. டிவி பார்ப்பதோ, பேப்பர் படிக்கும் பழக்கமோ எனக்குச் சுத்தமாக கிடையாது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பீர்களா என்றால் அதுவும் கிடையாது. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருக்கிறேன் என்றாலும் அதை எப்போதாவது தான் பயன்படுத்துவேன். 

தவான்

அதனால் அவர்கள் என்ன விவாதித்தாலும் அது என்னைத் தொந்தரவு செய்யாது. உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எதிர்மறைகளைக் கவனிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை" என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கும் தவானின் பலம் எது என்று கேட்டால், ``ஃபேமிலி தான் பலம். ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின்போதும் அவர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என ஆசை. ஆனால், குழந்தைகளுக்கு ஸ்கூல் இருப்பதால் அது முடிவதில்லை. அதனால் 15 நாள்கள் மேல் விடுமுறை எப்போது கிடைத்தாலும் அவர்களுடன் நேரம் செலவிடுவதற்காக மெல்போர்ன் பறந்துவிடுவேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க