``வீரர்களுக்கான பனிஷ்மென்ட்; தோனி வச்ச ட்விஸ்ட்!” - சுவாரஸ்யம் பகிரும் ஆலோசகர் | Dhoni had came up with new idea for late coming players

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (15/05/2019)

கடைசி தொடர்பு:20:08 (16/05/2019)

``வீரர்களுக்கான பனிஷ்மென்ட்; தோனி வச்ச ட்விஸ்ட்!” - சுவாரஸ்யம் பகிரும் ஆலோசகர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது கூலான அணுமுறை மூலம் அதிக ரசிகர்களைக் கொண்டவர். இந்தியா மட்டுமல்லாது அவரது கேப்டன்ஷிப் -க்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். களத்தில் ஃபீல்டிங் செட் செய்வது முதல் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை மூலம் நம்பிக்கை அளிப்பது என மற்றவர்களுக்கும் முன்னோடியாக இருப்பார். 

தோனி

இந்திய அணியின் முன்னாள் மனநிலை ஆலோசகர் பேடி அப்டான், தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பேர்ஃபூட்( Barefoot) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தக அறிமுக விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் புத்தகத்தில் இந்திய அணிக்கு ஆலோசகராகச் செயல்பட்டது தொடங்கி வீரர்களின் செயல்பாடு எனப் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். 

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் தோனியின் மனநிலை குறித்து பல்வேறு விஷங்களை வெளியிட்டார். அவர், ``தோனியின் பலமே அவரது அமைதிதான். மேலும் போட்டியின் சூழலை அவர் பொருட்படுத்தமாட்டார். ஒரு பலமான தலைவராக, கடினமான சூழலிலும் அவர் மற்ற வீரர்களையும் அமைதியாகச் செயல்படும்படி செய்வார். அதுவே அவரது உண்மையான பலம் என்பேன்” என்றார். 

மேலும் பயிற்சியின் போது நடைபெறும் சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அப்டான் பேசுகையில், ``நான் அணியில் சேரும்போது டெஸ்ட் போட்டிகளுக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும் இருந்தனர். 

கும்பிளே

அப்போது பயிற்சியில் சில விஷயங்கள் கடுமையாகப் பின்பற்றப்படும். குறிப்பாகப் பயிற்சி மற்றும் அணியின் மீட்டிங்கு தாமதமாக வரக் கூடாது என ஸ்ட்ரிக்டாகச் சொல்லப்பட்டது. அனைத்து வீரர்களிடமும் கூட்டத்துக்கு மற்றும் பயிற்சிக்கு நேரத்துக்கு வருவது நல்ல விஷயம் தானே எனக் கேள்வி கேட்கப்பட்டது. அனைவரும் ஆம் என்றனர். அப்போது, தவறும் வீரர்களை என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். வீரர்களிடமும் ஆலோசனை நடத்தினோம். இறுதியில் கேப்டன்கள் முடிவு செய்யட்டும் என அவர்களிடம் விட்டுவிட்டோம். 

தோனி

டெஸ்ட் போட்டி கேப்டன் கும்ப்ளே தாமதமாக வரும் வீரர்களுக்கு ரூ.10,000 அபராதமாகக் கட்ட வேண்டும் எனத் தெரிவித்தார். அந்த முறை டெஸ்ட் போட்டிகளின்போது பின்பற்றப்பட்டது. பின்பு இது தொடர்பாக ஒருநாள் அணியின் கேப்டன் தோனியிடம் விவாதிக்கப்பட்டது. அப்போது அவர்,  ``யெஸ்... கண்டிப்பாகத் தண்டனை இருக்க வேண்டும். யாராவது தாமதமாக வந்தால், அணியில் இருக்கும் அனைவரும் தலா ரூ.10,000 அபராதமாகக் கட்ட வேண்டும் என அறிவித்து ஷாக் கொடுத்தார். இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் யாரும் தாமதமாக வரவில்லை” என்றார். 

எதிலும் வித்தியாசமாக யோசிப்பது தோனிக்கு புதிதில்லையே....!