`மாஸ்டர் அது நோபால்!' - ஐசிசியின் நக்கலும் சச்சினின் கவுன்டரும்... | ICC takes a funny dig at Sachin Tendulkar for bowling a no-ball

வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (15/05/2019)

கடைசி தொடர்பு:19:12 (15/05/2019)

`மாஸ்டர் அது நோபால்!' - ஐசிசியின் நக்கலும் சச்சினின் கவுன்டரும்...

சச்சின் டெண்டுல்கர்


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்த ஓய்வு பெற்ற இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறுவர்களுக்கான கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கியுள்ளார். தனது பால்ய நண்பரான வினோத் காம்ப்ளியுடன் இணைந்து இந்த ‘டெண்டுல்கர் மிடில்செக்ஸ் கிரிக்கெட் அகாடமியை’ நடத்தி வருகிறார். அப்போதே தனது பள்ளிக்கால நண்பர் காம்ப்ளியுடன் இணைவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அகாடமியில் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

வலைபயிற்சியில் சச்சின்

கேப்ஷனில், “காம்ப்ளியுடன் மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த அனுபவம். சிவாஜி பார்கில் நாங்கள் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடிய காலத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறது. சிலருக்கு மட்டுமே தெரியும் நானும் காம்ப்ளியும் ஒரே அணியில் விளையாடினோம் என்று தெரியும். நாங்கள் இருவரும் எதிராக விளையாடியதில்லை எனப் பதிவிட்டார். அந்த வீடியோவில் முதலில் சச்சின் சிறிது நேரம் பந்துவீசுகிறார். வினோத் காம்ப்ளி பேட் செய்கிறார். பின்னர் சச்சின் பேட் செய்கிறார். இதற்கு என்ன பாஸ்னு கேக்குறீங்களா. இந்த வீடியோவுக்கும் வழக்கமாக ஏராளமான ரியாக்‌ஷன் வந்து குவிந்தது.

ஐசிசியின் ட்விட்டர் பதிவு

இந்த வீடியோவுக்கு ஐசிசி அடித்த கமென்டும் அதற்கு சச்சின் கொடுத்த கவுன்டரும்தான் ஹைலைட்டே. சச்சின் பந்துவீசும்போது க்ரீஸுக்கு வெளியே காலை வைத்துப் பந்துவீசினார். அதைப் படம்பிடித்த ஐசிசி அந்தப் புகைப்படத்துடன் அம்பயர் நோ-பால் சிக்னல் காட்டும் படத்தையும் இணைந்து கமென்ட் செய்தது. கேப்ஷனில் சச்சின் உங்கள் முன்னங்காலைக் கவனியுங்கள் எனப் பதிவிட்டிருந்தனர். ஐசிசி பதிவிட்ட புகைப்படத்தில் இருப்பவர் ஜமைக்காவை சேர்ந்த ஸ்டீப் பக்னர் (Steve Buckner) இவருக்கும் சச்சினுக்கும் கிரிக்கெட்டில் ஏக பொருத்தம். பல போட்டிகளில் சச்சினுக்குத் தவறான அவுட்டை வழங்கி இந்திய ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாவனர். இவரது தவறான முடிவுகளால் இந்திய அணி பல தொடர்களையும் இழந்துள்ளது. இதை ரசிகர்களும் நினைவுகூர்ந்து ட்வீட் செய்திருந்தனர்.

ஐசிசியின் இந்த ட்வீட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக சச்சின் ‘இந்தமுறை நான் பந்துவீசினேன், பேட்டிங் செய்யவில்லை. நடுவரின் முடிவே எப்போதும் இறுதி முடிவு எனப் பதிவிட்டுள்ளார்.