`2 காரணங்களுக்காக தோனியின் ரன் அவுட் ட்வீட்டை நீக்கிவிட்டேன்!' - நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் #IPL2019Final | NZ Player explains about why he deleted the tweet regarding MSD run out

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (16/05/2019)

கடைசி தொடர்பு:13:05 (16/05/2019)

`2 காரணங்களுக்காக தோனியின் ரன் அவுட் ட்வீட்டை நீக்கிவிட்டேன்!' - நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் #IPL2019Final

ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் தொடர்பாக ட்வீட் செய்திருந்த நியூசிலாந்து வீரர் நீஷம் தற்போது அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். 

தோனியின் ரன் அவுட்

ஐபிஎல் முடிந்து மக்களின் கவனம் எல்லாம் உலகக்கோப்பை பக்கம் சென்றுவிட்டது. ஆனாலும் சில விஷயங்கள் இன்னும் புகைந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சேஸிங்கின்போது தோனிக்கு வழங்கப்பட்ட ரன் அவுட் சர்ச்சை இன்னமும் தொடர்கிறது. ரசிகர்கள் பலரும் அது குழப்பமான இடம். குழப்பம் இருக்கும்பட்சத்தில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத்தானே தீர்ப்பு வழங்க வேண்டும் என விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி சமூகவலைதளங்களில் விவாதித்து வந்தனர். சென்னை அணியின் தோல்விக்கு இந்த ரன் அவுட் முக்கிய காரணமாக இருந்தது. 

நீஷம்

இது தொடர்பான விவாதங்கள் குவிந்துகொண்டு இருக்க, நியூசிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் ரன் அவுட் தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து, ``சில ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட உணர்வை நான் மதிக்கிறேன். தோனி மீதும் அதிக மரியாதை கொண்டுள்ளேன்.. ஆனால், கீழே உள்ள படத்தைப் பார்த்தும் இதை அவுட் இல்லை என்பது எனக்குத் திகைப்பாக உள்ளது” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து அவரது பதிவில் கமென்ட் செய்தும் ரீ ட்வீட் செய்தும் வந்தனர். பலர் அவரைத் திட்டியும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், அவர் தனது ட்வீட்டை திடீரென டெலீட் செய்துவிட்டார். பின்னர் இது தொடர்பாக அவர் ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார். 

நீஷம் விளக்கம்

அந்தப் பதிவில் நீஷம், ``தோனியின் ரன்-அவுட் தொடர்பான ட்வீட்டை டெலீட் செய்துவிட்டேன். அதற்குக் காரணம் எனது முடிவை மாற்றிக்கொண்டேன் என்பது கிடையாது. ஆனால், தினமும் எனது பக்கத்தில் சுமார் 200 கமென்ட்ஸ் வந்து விழுந்ததைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிட்டேன். ஆனாலும் அவையெல்லாம் குறித்து நான் பொருட்படுத்துவது கிடையாது. இது தொடர்பாக இனியும் ட்வீட் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்றார்.