`பரிசுத் தொகை வேண்டாம்; ஒரு நிமிடம் கேளுங்கள் போதும்!' - லார்ட்ஸ் மைதானத்தைக் கலக்கிய தமிழக சிறுமிகளின் குரல் #savestreetchildren | TN Street children won international cricket championship trophy

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (17/05/2019)

கடைசி தொடர்பு:15:32 (17/05/2019)

`பரிசுத் தொகை வேண்டாம்; ஒரு நிமிடம் கேளுங்கள் போதும்!' - லார்ட்ஸ் மைதானத்தைக் கலக்கிய தமிழக சிறுமிகளின் குரல் #savestreetchildren

இந்த உலகம் சாதித்தவர்களை மட்டுமே திரும்பிப் பார்க்கும். அப்படி விளையாட்டில் சாதித்து பிரபலமானவர்கள் ஏராளம். ஆனால் சிலரின் சாதனைகள்கூட வெளியில் தெரிவதில்லை. அப்படி சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்களின் திறமையும் வெளியில் தெரியாமல்தான் உள்ளது. ஏனெனில் இவர்கள் தெருவோரக் குழந்தைகள். 

தென் இந்திய தெருவோர குழந்தைகள் அணி

ஆம், லண்டனில் நடைபெற்ற தெருவோரக் குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் நம் தமிழக தெருவோர முத்துகள். சென்னையில் உள்ள கருணாலயா என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளனர். 

தமிழக மாணவர்களை லண்டன் அழைத்துச் சென்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்மிடம் பேசும்போது, ``சென்னையிலிருந்து நான்கு பேரும் மும்பையில் இருந்து நான்கு பேரும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தேர்வானார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த பால்ராஜ், சூர்யா என்ற மாணவர்களும், மோனிஷா, நாகலக்ஷ்மி என்ற மாணவிகளும் கலந்துகொண்டனர். முதலில் நாங்கள் அனைவரும் கேம்ப்ரிட்ஜ் நகரில்தான் தங்கியிருந்தோம். 

அரையிறுதிப் போட்டியும், இறுதிப் போட்டியும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த சர்வதேச தொடரில் மொத்தம் எட்டு நாடுகள் கலந்துகொண்டன. அனைத்து நாடுகளுடனும் இந்திய அணி விளையாடியது. அதன் மூலம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதியில் வங்க தேச அணியுடன் மோதி எளிதாக வென்றதால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றோம். இங்கிலாந்தின் சொந்த மண்ணில் அந்த அணியுடனேயே இறுதிப் போட்டி நடைபெற்றது. அதிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

தென் இந்திய தெருவோர குழந்தைகள் அணி

இது வெறும் போட்டியாக மட்டும் இல்லாமல் தெருவோரக் குழந்தைகளில் உரிமைகளை முன்வைக்கும் ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. அங்கு தெருவோரக் குழந்தைகளுக்கான மாநாடு நடைபெற்றது. அதில் சென்னையிலிருந்து சென்ற மோனிஷா என்ற மாணவி இந்திய அணி சார்பாகப் பேசினார். அவர் தெருவோரக் குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கூறினார். அனைத்துக் குழந்தைகளையும் மதிக்க வேண்டும். அவர்களையும் சமூகத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான சுத்தமான குடிநீர், கழிவறை, சுத்தமான உணவு கல்வி இவை அனைத்தும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்'' எனத் தெரிவித்தார். 

மேலும் அவர், ``தெருவோரக் குழந்தைகள் என்ற ஒரே காரணத்துக்காக செய்யாத தவற்றுக்கு இங்குள்ளவர்களைக் கைது செய்கிறார்கள். அவர்கள் தினம் தினம் நிறைய பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். தெருவோரங்களில் வாழும் குடும்பத்தினரை அப்புறப்படுத்துவதால் அதிகம் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். ‘நீங்கள் எங்களை மதித்தால் நாங்கள் சொல்வதைக் கேட்பீர்கள். நாங்கள் சொல்வதை ஒரு நிமிடம் காதுகொடுத்துக் கேட்டால் நீங்கள் எங்களை நிச்சயம் பாதுகாப்பீர்கள்’ என மோனிஷா பேசினார்.

தென் இந்திய தெருவோர குழந்தைகள் அணி

``தமிழக அரசு சார்பில் இந்த விளையாட்டுப் போட்டிக்காக எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்க்கிறோம். வெற்றி பெற்ற பிறகு எங்களுக்கு எந்தப் பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை. நாங்கள் செல்வதற்கு முன்பே ஒருவரிடம் கடன் வாங்கிதான் அனைத்து மாணவர்களையும் அழைத்துச் சென்றோம். விமான சீட்டுக்கு மட்டும் ஏழு லட்சம் வரை செலவானது. அதைக்கூட இன்னும் நாங்கள் கட்டவில்லை. அதிகமாக எங்களுக்கு உதவ வேண்டாம் நாங்கள் வங்கியுள்ள கடனை அடைக்க உதவினால் மட்டுமே போதும்” எனக் கூறினார். 

மாணவர்களின் வெற்றி குறித்து பேசிய கருணாலயா அமைப்பின் நிறுவனர் பால் சுந்தர், ``தமிழக மாணவர்கள் வெற்றி பெற்ற பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த அனைவரும் எங்களைப் பார்த்து வியந்தனர். மாணவி மோனிஷாவின் பேச்சைக் கேட்டு பலரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இது தமிழகத்துக்குப் பெருமையாக உள்ளது. இருந்தும் இந்தக் குழந்தைகளுக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது. அதை யார் செய்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோம். இந்தக் குழந்தைகள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. அவர்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். விளையாட்டுத் துறையில் இந்தியா விரைவில் பெரிய நிலைக்குச் செல்லும் என்பதற்கு இது ஒரு அறிகுறி” எனப் பேசிமுடித்தார்.