90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்! | Chris Woakes will be England team's major weapon

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (18/05/2019)

கடைசி தொடர்பு:10:49 (18/05/2019)

90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்!

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் பால் காலிங்க்வுட் இவரது ஸ்விங்கை “90 miles/hr வேகத்தில் வரும் லெக் ப்ரேக்” என புகழ்ந்துள்ளார். அப்படியிருக்கும் அவரது ஸ்விங்குகள்!

90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்!

பத்து அணிகள் கலந்துகொள்ளும் இந்த உலகக் கோப்பை தொடரில், மொத்தம் 150 வீரர்கள் கலந்துகொள்ளப் போகிறார்கள். வெகுசில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடியவர்கள். பலரும் நமக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள். அதனால், ஒவ்வொரு வீரரைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்... இன்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ். 

பெயர் : கிறிஸ் வோக்ஸ்

பிறந்த தேதி : 2-4-1989

ஊர் : பர்மிங்ஹாம், வார்விக்‌ஷயர்

ரோல் :  பெளலிங் ஆல்ரவுண்டர்

பேட்டிங் ஸ்டைல் : வலது கை பேட்ஸ்மேன்

பெளலிங் ஸ்டைல் : வலது கை மீடியம் பேஸ்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 12-1-2011

கிறிஸ் வோக்ஸ்

பிளேயிங் ஸ்டைல்

கிறிஸ் வோக்ஸ் - எந்த ஒரு கேப்டனும் தன் அணியில் இருக்க விரும்பப்படும் வீரர். ஆம்! நியூ பால் கொண்டு ஆரம்ப ஓவர்களில் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறவைக்கவும் செய்வார்; ஸ்லாக் ஓவர்களில் யார்க்கர், ஸ்லோ பால் என வெரைட்டி காட்டி ரன்களைக் கட்டுப்படுத்தவும் செய்வார். முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் இவரது ஸ்விங்கை ``90 miles/hr வேகத்தில் வரும் லெக் ப்ரேக்” எனப் புகழ்ந்துள்ளார். அப்படியிருக்கும் அவரது ஸ்விங்குகள்! கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 17.36. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் சிறந்த சராசரி இதுதான். 

வோக்ஸ் விளையாடாத போட்டிகளில் இங்கிலாந்து முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் இருந்திருக்கிறது. இத்தகைய ஸ்டேட்களை சொல்லும்போது புரிந்திருக்கும், நியூ பாலில் இங்கிலாந்து அணிக்கு இவரது பங்கு எப்படியென்று! பெளலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அணிக்கு முக்கியமான நேரங்களில் ரன்கள் எடுத்து உதவுவார். கீழ் வரிசையில் இறங்கி பொறுமையாக ரன்களும் சேர்ப்பார், ஒரு பந்துக்கு 4 ரன்கள் வேண்டும் என்றால் பவுண்ட்ரி அடித்து அதிரடி காட்டவும் செய்வார்.

கிறிஸ் வோக்ஸ்

சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தது எப்படி?

ஆஸ்டன் மேனர் கிரிக்கெட் கிளப்பில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது வோக்ஸ் வயது 7. பிறகு வார்விக்‌ஷயர் அணிக்காக 17 வயதுக்குட்பட்டோர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2008–ம் ஆண்டில் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் 42 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சு சராசரியைப் (20.57)  பெற்றிருந்தார். அதுதான் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இடம்பிடிக்க காரணமாக அமைந்தது. களமிறங்கிய முதல் போட்டியிலேயே, (வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான பயிற்சி போட்டியில்) 6 விக்கெட்டைக் கைப்பற்றி இங்கிலாந்து ரசிகர்களை `வாவ்’ சொல்ல வைத்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கிலும் அரைசதம், சதம் என்று வெளுத்து வாங்க, அதன் நீட்சியாக இங்கிலாந்து டி20 அணியில் இடம்பெற்றார். ஆஸ்திரேலியாக்கு எதிரான முதல் போட்டியிலேயே வின்னிங் ரன்கள் அடித்து அமர்க்களப்படுத்தினார்.

கிறிஸ் வோக்ஸ்

ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இடம்பெற்றபோதிலும், அடிக்கடி காயம் ஏற்படுவது அவருக்குப் பின்னடைவாக இருந்தது. இவரது வேகம் டெஸ்ட் போட்டிகளில் எடுபடாதது, பென் ஸ்டோக்ஸின் வளர்ச்சி போன்ற சில காரணங்களால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இவரது பங்கு அபாரமானது. முதல் ஸ்பெல்லில் பந்தை ஸ்விங் செய்து, எப்படியாவது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார். டெஸ்ட் அணியில் இடம்பெறாத போதிலும் சோர்ந்துவிடாமல் முழுவீச்சில் பயிற்சியை மேற்கொண்டார். 2006-ம் ஆண்டு வோக்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. பெளலிங்கில் வேகத்தைக் கூட்டி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 9 விக்கெட்டுகள், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஒரே போட்டியில் 11 விக்கெட்டுகள், இந்தியாக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் (137) என பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள் ஆடி, இன்று இங்கிலாந்து அணியின் மிக முக்கிய பெளலிங் ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.

சிறந்த பெர்ஃபாமன்ஸ்கள்!

* பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் ஐந்து விக்கெட்டுகள்(மொத்தம்-11 விக்கெட்) கைப்பற்றித் தன்னை நிரூபித்தார் வோக்ஸ். லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்தப் போட்டியில் ஆண்டர்சன், பிராட் போன்றவர்களுக்கே அவ்வளவு ஸ்விங் ஆகவில்லை. ஆனால் வோக்ஸ், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டு பக்கமும் பந்தை மூவ் செய்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

கிறிஸ் வோக்ஸ்

* 2018 அதே லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் அசத்தினார் வோக்ஸ். முதல் இன்னிங்ஸில் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், இந்த முறை பேட்டிங்கிலும் அசத்தினார். கன்னா பின்னாவென பவுன்ஸ் மற்றும் ஸ்விங்கான பிட்ச்சில் 151-5 என இங்கிலாந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது 6-வது வீரராகக் களமிறங்கி, பொறுமையாக அதே சமயம் நேர்த்தியாக விளையாடி சதம் கடந்து (137*) “எனக்கு பேட்டிங்கும் வரும்" என உலகுக்கு நிரூபித்தார் வோக்ஸ். லார்ட்ஸ் மைதானத்தில் 10 விக்கெட்டுகளும் கைப்பற்றி, சதமும் அடித்த அந்த ‘எலைட்’ வரிசையில் தன் பெயரையும் பொறித்தார்.

கிறிஸ் வோக்ஸ்

வோக்ஸ் ஸ்பெஷல்

லார்ட்ஸ் மைதானத்தில், ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளும் கைப்பற்றி, சதமும் அடித்த வீரர்.

முதல் 10 ஓவர்களில் தற்போதுள்ள வீரர்களில் பெஸ்ட் ஆவரேஜ் இவருடையதுதான்.

ரோல் மாடல் : ஜேக் காலிஸ்

விருது : 2016-ல் `விஸ்டன் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்’ 

வோக்ஸுக்கு குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பது அவ்வளவு இஷ்டம். பயிற்சி இல்லாத சமயங்களில் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார்.

“என் பெளலிங்கில் எந்த மேஜிக்கும் செய்யவில்லை. நான் செய்வதெல்லாம் ஒன்றுதான். பேட்ஸ்மேன்கள் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்யக்கூடாது என நினைக்கிறார்களோ, அந்த இடத்தில் பிட்ச் செய்வேன்’”

                  - கிறிஸ் வோக்ஸ்


டிரெண்டிங் @ விகடன்