``அப்போ அவரை தீவிரவாதி என்போம்.. ஆனா இப்போ..!” - தோனியின் நண்பர் சத்ய பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்யம் | we used to call him as terrorist, says dhoni's friend

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (18/05/2019)

கடைசி தொடர்பு:11:52 (18/05/2019)

``அப்போ அவரை தீவிரவாதி என்போம்.. ஆனா இப்போ..!” - தோனியின் நண்பர் சத்ய பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்யம்

உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. உலகக்கோப்பை அணியில் அனுபவ வீரரான தோனியின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும் எனப் பல முன்னாள் இன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த கிரிக்கெட் திருவிழாவாக இங்கிலாந்தில் தொடங்க இருக்கிறது உலகக்கோப்பை. 

தோனி

இந்த நிலையில், பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் உலகக்கோப்பை குறித்தும் அதில் விளையாடும் வீரர்கள் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். தோனியின் பீகார் அணி நண்பரான சத்ய பிரகாஷ், தோனியுடன் இருந்த அனுபவங்களைப் பிரபல ஸ்போர்ட்ஸ் ஊடகமான ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிடம் பகிர்ந்துள்ளார். 

இந்த சத்ய பிரகாஷ் யாரென்று நினைவிருக்கிறதா... தோனியின் வாழ்க்கையை நம் கண்முன் காட்டிய எம்.எஸ் தோனி, `தி அண்டோல்டு ஸ்டோரி' படத்தில் தோனியின் நண்பராக சத்ய பிரகாஷ் என்கிற ஒருவர் வருவார். தற்போது தோனி தொடர்பான சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்திருப்பவர் ரியல் சத்ய பிரகாஷ். தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இன்னமும் அந்த நட்பு தொடர்வதாக சத்ய பிரகாஷ் முன்னரே சொல்லியிருக்கிறார்.   

சத்ய பிரகாஷ்

இளம் வீரர் இஷான் கிஷனுடன் இருப்பவர் தோனியின் நண்பர் சத்ய பிரகாஷ்

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்பத்தில் தோனி பீகார் அணிக்காக விளையாடியிருப்பார். அந்த அனுபவங்களைப் பகிர்திருக்கிறார் சத்ய பிரகாஷ்,  ``நாங்கள் தோனியை தீவிரவாதி என அப்போது அழைப்போம். அவர் களத்துக்குச் சென்றால் 20 பந்துகளில் 40-50 ரன்கள் அடித்துவிட்டு வந்துவிடுவார். ஆனால், நாட்டுக்காக ஆடும்போது அவர் துறவியைப் போன்று ஆகிவிட்டார். அவர் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டார்.

 
அப்போதெல்லாம் தோனி பெரிதாக கேப்டன்ஷிப் செய்தது கிடையாது. ஆனால், இப்போது பாருங்கள்.. உலகின் சிறந்த வீரர்களுக்கு அவர் கேப்டனாக இருந்திருக்கிறார். அவர் தொடர்ந்து கற்றுக்கொண்டு இருக்க விரும்புவார். நாங்கள் ஒன்றாக விளையாடிய காலத்தில் அவர் இந்தியில் மட்டுமே பேசுவார். ஆங்கிலத்தில் பேசமாட்டார். ஆனால், இப்போது பாருங்கள். சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்" என்றார் கண்ணில் பெருமை பொங்க...

சத்ய பிரகாஷ் தற்போது காராக்பூர் ப்ரீமியர் லீக் என்னும் உள்ளூர் தொடரில் விளையாடி வருகிறார்.