``தோனியின் வலைப்பயிற்சியைப் பார்த்திருக்கிறேன்; அதனால்தான் இதைச் சொல்கிறேன்!” - ஹர்பஜன் சிங் | harbajan singh talks about dhoni and wc

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (18/05/2019)

கடைசி தொடர்பு:11:55 (18/05/2019)

``தோனியின் வலைப்பயிற்சியைப் பார்த்திருக்கிறேன்; அதனால்தான் இதைச் சொல்கிறேன்!” - ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முழுவதும் உலகக்கோப்பை பக்கம் திரும்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தோனியின் பக்கம் திரும்பியுள்ளது. இது அவருக்குக் கடைசி உலகக்கோப்பை என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால் அவரின் ஆட்டத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தோனி

ஆனால், தோனியின் தற்போதைய ஃபார்முலா என்பது, நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி, பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியில் இறங்குவதாக உள்ளது. ஆனால், வரும் உலகக்கோப்பைத் தொடரில் தோனி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்கிறார் சென்னை அணியின் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். 

தோனி

பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த ஹர்பஜன் சிங்,  ``தோனி தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடும்போது, அவர் தனது பெஸ்ட்டை வழங்கியுள்ளார். அவரது சில சிறந்த இன்னிங்ஸ்கள் இதுபோன்று தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடும்போதுதான் வந்திருக்கிறது. அதனால் அணி நிர்வாகம் தோனி மற்றும் பாண்ட்யாவுக்கு அவர்கள் வழியில் விளையாட அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கக் கூடாது. 

ஹர்பஜன்

ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கோலி, ராகுல் போன்ற வீரர்கள் தொடக்கத்தில் அணிக்கு நிலையான தொடக்கத்தைத் தருவார்கள். அதன் காரணமாக வந்த உடனே தோனி அதிரடியாக விளையாடலாம். அதற்கான சுதந்திரம் அவருக்கு இருக்கும். தோனி சில ஸ்பின்னர்களிடம் திணறுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எந்த ஸ்பின்னரின் பந்துவீச்சிலும் இரண்டாவது பந்தை அவரால் சிக்ஸருக்குப் பறக்கவிட முடியும். அது மிகப் பெரிய சிக்ஸாகவும் இருக்கும். அவரால் அது முடியும். அவர் அதைச் செய்ய வேண்டும். சி.எஸ்.கே அணிக்காக விளையாடும்போது அவரது வலைப் பயிற்சியை நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன். இன்னமும் அவரால் பிரமாண்ட சிக்ஸர்களை பறக்கவிட முடியும். 

தோனி

ஒரு பந்துவீச்சாளரின் மனநிலை என்ன என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை நான் கெவின் பீட்டர்சன் மற்றும் இயான் பெல்லுக்கு பந்துவீசுகிறேன் என்றால், நான் பீட்டர்சனுக்கு பந்துவீசத்தான் பயம்கொள்வேன். அவருக்கு இரண்டு டாட் பால்கள் வீசினாலும் அடுத்த பந்துகளில் என்னை அவர் அட்டாக் செய்ய முடியும். ஆனால், பெல் மாதிரியான வீரர்கள் சிங்கிள்தான் எடுப்பார்கள். தோனி பீட்டர்சன் போன்று பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் பேட்ஸ்மேன். 

இந்திய அணியில் 4- வது இடம் குறித்து தொடர்த்து விவாதிக்கப்படுகிறது. ராகுலைத் தவிர அந்த இடத்துக்குப் பொருத்தமான வேறு வீரர் எனக்குத் தெரியவில்லை. அதேபோன்று 6-வது இடமும் எனக்கு சற்று கவலையாக இருக்கிறது. கேதர் ஜாதவ் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னால் முழுத்தகுதிப் பெற்றுவிடுவார் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் 6-வது இடம் மிக முக்கியம்” என்றார். 

பும்ரா

மேலும் கேம் சேஞ்சராக யார் இருப்பார் என்ற கேள்விக்கு, கோலி அல்லாமல் பும்ராவும் கேம் சேஞ்சராக இருப்பார்'' என்றார் ஹர்பஜன். மேலும் அவர்,  ``சச்சின், பும்ராவை உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றிருக்கிறார். அத்தகைய தாக்கத்தை அவர் உருவாக்கியுள்ளார். பும்ராவை அணியில் இருந்து எடுத்தால் அது உங்களின் உடலில் இருந்து இதயத்தை எடுப்பது போன்றது. இந்திய பந்துவீச்சில் அவர் ஒரு விராட் கோலி போன்றவர்” என்றார். 

மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் விளையாடும் என அவர் கணித்திருக்கிறார்.