`கிறிஸ் கெய்ல் தட்டிக் கொடுத்தார்... எடப்பாடி..?' - சாதனைச் சிறுவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு | Chris Gayle meets street children who participate the world cup

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (18/05/2019)

கடைசி தொடர்பு:14:54 (18/05/2019)

`கிறிஸ் கெய்ல் தட்டிக் கொடுத்தார்... எடப்பாடி..?' - சாதனைச் சிறுவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு

இந்தியர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு என்பதைத் தாண்டி அது அவர்களின் உணர்வாக மாறிவிட்டது. ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என இப்போது இருந்தே ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்தப் பிரார்த்தனைகள் என்பது பெரியோர்களுக்கான கிரிக்கெட்டிற்கு மட்டுமே. மாற்றுத்திறனாளிகளோ, பார்வையற்றோர்களோ கிரிக்கெட்டிலோ அல்லது வேறு விளையாட்டிலோ வென்றால் அவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. 

தமிழக குழந்தைகள்

அதற்குச் சான்று சமீபத்தில் நடந்து முடிந்த தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. இதில் தமிழகத்திலிருந்து சென்ற சிறுவர்கள் கோப்பையை நமதாக்கி வந்தனர். இந்தச் சிறுவர்களைப் பாராட்ட யாரும் முன்வரவில்லை. தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவே சென்று அங்குள்ள சூழ்நிலைகளைச் சமாளித்து இந்தச் சிறுவர்கள் வெற்றிகண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் இவர்களைப் பாராட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில் இவர்களுக்கு அரசு சார்பில் இதுவரை எந்த உதவித்தொகையும் வழங்கவில்லை. 

தமிழக குழந்தைகள்

தேர்தல் விதிமுறைகளைக் காரணம் காட்டி உதவித்தொகை அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் பாராட்டு?... அரசு சார்பில் முதல்வரோ, துணை முதல்வரோ, ஏன் விளையாட்டுத் துறை அமைச்சர் கூட இவர்களைப் பாராட்டி ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்பதுதான் கூடுதல் சோகம். `பரிசுத் தொகை என்பதைத் தாண்டி; பாராட்டுகள்தான் அவசியம். ஆனால் அதைச் செய்ய அரசு முன்வரவில்லை" தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற சிறுவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தமிழக அரசுதான் இப்படி என்றால் பிசிசிஐ அமைப்போ, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரோ, இந்திய விளையாட்டு வீரர்களோ யாருமே இவர்களைப் பாராட்டவில்லை. இந்தியாவில்தான் இந்த நிலைமை என்பதற்குச் சான்றாக மற்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 

கிறிஸ் கெய்ல்

இதே உலகக்கோப்பையில் பங்கேற்ற எட்டு அணிகளில் ஜமைக்கா அணியும் ஒன்று. அந்த அணி கோப்பையைக் கைப்பற்றவில்லை என்றாலும் நாட்டின் சார்பாக கலந்துகொண்டதற்காக அந்தக் சிறுவர்களைப் பாராட்டி, அவர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். வெற்றியோ, தோல்வியோ அது இரண்டாவது. ஆனால் பங்களிப்பு முக்கியமானது.... சாலையோரங்களில் வீடுகள் இல்லாமல் வசித்து வரும் சிறுவர்கள் தங்கள் கஷ்டத்தையும் மறந்து சொந்த நாட்டின் பெருமையை நிலைநாட்ட கிரிக்கெட்டில் கலந்துகொண்ட அவர்களைப் பாராட்டுவது முக்கியமானது என்பதை உணர்ந்து கெய்ல் இதைச் செய்துள்ளார். இதேதான் மற்ற நாடுகளிலும். மற்ற நாடுகளில் சிறுவர்களுக்கான தேவையான உதவிகளைச் செய்துள்ளனர். 

கிறிஸ் கெய்ல்

ஆனால் கோப்பையைக் கைப்பற்றிய பின்பும், தமிழகச் சிறுவர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது. ஜமைக்கா குழந்தைகளுக்குச் சாத்தியப்பட்டது, தமிழகச் சிறுவர்களுக்குச் சாத்தியப்படவில்லை. இதுதான் இந்தியா என ரசிகர்கள் வலைதளங்களில் குமுறி வருகின்றனர். கிரிக்கெட்டைக் கொண்டாடும் கிரிக்கெட்டை மட்டுமே நேசிக்கும் இந்தியாவில் இந்தக் குழந்தைகளின் சாதனையை அரசு எப்போது பாராட்டுமோ...? மற்றவர்கள் எப்போது கண்டுகொள்வார்களோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க