340 ரன் அடித்தும் தடுமாறிய பாகிஸ்தான்... இங்கிலாந்தை மீட்ட பென் ஸ்டோக்ஸ்! #ENGvsPAK | England vs Pakistan 4th ODI match report

வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (18/05/2019)

கடைசி தொடர்பு:15:53 (18/05/2019)

340 ரன் அடித்தும் தடுமாறிய பாகிஸ்தான்... இங்கிலாந்தை மீட்ட பென் ஸ்டோக்ஸ்! #ENGvsPAK

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து, மற்ற அணிகளைவிடவும் பலமான அணியாக உலகக்கோப்பைக்குள் நுழைகிறது. #ENGvsPAK

340 ரன் அடித்தும் தடுமாறிய பாகிஸ்தான்... இங்கிலாந்தை மீட்ட பென் ஸ்டோக்ஸ்!  #ENGvsPAK

மே 30-ம் தேதி தொடங்கவுள்ள கிரிக்கெட் உலகக்கோப்பையில் பங்கேற்க, தேர்வாகிய அணிகள் எல்லாம் இங்கிலாந்துக்குப் படையெடுக்க உள்ளன. சொந்த ஊரில் நடக்க இருப்பதால், முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து, மற்ற அணிகளைவிடவும் பலமான அணியாக உலகக்கோப்பைக்குள் நுழைகிறது. #ENGvsPAK

#ENGvsPAK

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து, நான்காவது போட்டியை வென்றது மட்டுமன்றி தொடரையும் கைப்பற்றியது. போட்டியின்போது மழை பாதியில் குறுக்கிட்டதால், முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. அடுத்தடுத்து நடந்த இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து அணி வெல்ல, தொடரைச் சமன் செய்ய பாகிஸ்தானுக்குக் கட்டாய வெற்றி தேவைப்பட்டது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்து வீச்சைத் தாமதப்படுத்தியதால், கேப்டன் இயன் மோர்கனுக்கு நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாட ஐசிசி தடைவிதித்தது. நாட்டிங்ஹாம் மைதானத்தில் தொடங்கிய நான்காவது போட்டியில் மோர்கனுக்கு பதிலாக ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற அவர் ஃபீல்டிங் தேர்வு செய்ய, இமாம்-உல்-ஹக், ஃபகர் ஜமான் இணை பாகிஸ்தானுக்கு ஓப்பனிங் இறங்கியது. 

இரண்டாவது, மூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் 350+ ஸ்கோர் அடித்தும் பாகிஸ்தானுக்கு வெற்றி கைகூடவே இல்லை. இதே பரிதாபம், நாட்டிங்ஹாமிலும் தொடர்ந்தது. மார்க் வுட் வீசிய நான்காவது ஓவரின்போது, முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓப்பனர் இமாம்-உல்-ஹக் retired -hurt ஆனார். ஒன் டவுன் களமிறங்கிய பாபர் அசாம் அடித்து விளையாட, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஒருபுறம் ஃபகர் ஜமான் அரைசதம் கடக்க, மறுபுறம் பாபர் அசாம் சதம் அடிக்க 36 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 220 ரன்களை எட்டியிருந்தது. இந்தக் கூட்டணியை உடைத்தால்தான் இங்கிலாந்துக்கு நல்லது என்பதை உணர்ந்த கேப்டன் பட்லர், டாம் கரனுக்கு ஆலோசனைகள் வழங்கி அனுப்பினார். கிடைத்தது பலன். ``பார்ட்னர்ஷிப்பை மட்டும் உடைச்சு என்ன பலன், இரண்டு பேரையும் பெவிலியன் அனுப்பிடலாம்" என டாம் கரன் ஸ்கெட்ச் போட, ஃபகர், பாபர் அசாம் விக்கெட்டுகள் சரிந்தன.

பாபர் அசாம் #ENGvsPAK

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை ஆடினர். 59 ரன்களில் ஹஃபீஸையும், 41 ரன்களில் மாலிக்கையும் பெவிலியன் அனுப்பிய மார்க் வுட், இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமன்றி இரண்டு கேட்சுகளுடன் ஃபீல்டிங்கிலும் அசத்தினார். பாபர் அசாமின் சதமும், மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தினாலும் 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 340 எடுத்து இன்னிங்ஸை முடித்தது. 

தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் சேஸிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, ஜேஸன் ராய் - ஜேம்ஸ் வின்ஸ் இணை அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது. 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் என ஜேசன் ராய் வெளுத்து வாங்க, தன் பங்கிற்கு ஜேம்ஸ் வின்ஸ் சில பவுண்டரிகளை தட்டிவிட்டு அணியின் சேஸிங்கை எளிதாக்கினர். 

இங்கிலாந்துக்கு டாம் கரன் எனில் பாகிஸ்தானுக்கு முகமது ஹஸ்னைன். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ராய் - வின்ஸ் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது மட்டுமன்றி, இரண்டு பேரையும் பெவிலியனுக்கு அனுப்பி தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக செய்து முடித்தார் ஹஸ்னைன். இந்த இடத்திலிருந்து இங்கிலாந்து அணி சேஸிங்கில் தடுமாறியது. ஜோ ரூட் 36 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் பட்லரும், மொயின் அலியும் டக்-அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். 31-வது ஓவரின் முடிவில், 217/5. வெற்றி பெற 19 ஓவர்களில் 124 ரன்கள் தேவைப்பட்டது.

ஜேசன் ராய் #ENGvsPAK

தடுமாறிக்கொண்டிருந்த இங்கிலாந்தின் சேஸிங்கை வெற்றி திசையில் திருப்பியது பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, ஸ்டோக்ஸுடன் பார்ட்னர்ஷிப் நின்றார் டாம் கரன். வெற்றி பெற கடைசி ஓவர் வரை இரண்டு அணிகளும் போராடின. கிடைத்த வாய்ப்புகளில் ஸ்டோக்ஸ் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்த, 12 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஜேஸன் ராயின் சதம் வீணாகாமல் இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது, இந்த 49-வது ஓவரில்தான். ஜூனைத் கான் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் மூன்று ரன்கள் கிடைத்தது. இரண்டாவது பந்தை சிக்ஸருக்குப் பறக்க விட்டு, அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் ஸ்டோக்ஸ். நான்காவது பந்தை டாட் பாலாக்கிய ரஷித் கடைசி இரண்டு பந்துகளில் 2, 4 எடுக்க, அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 49.3-வது ஓவரில் எளிதாக இலக்கை எட்டி, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. 

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. 3–0 எனத் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, `உலகக்கோப்பைக்கு நாங்க ரெடி’ என அறிவித்து விட்டது. பேட்டிங்கில் 300 ரன்களுக்கு மேல் அசால்ட்டாக எடுக்கும் பாகிஸ்தான், பெளலிங், ஃபீல்டிங் சொதப்பல்களை உலகக் கோப்பைக்கு முன் சரி செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில், ஒரு காலத்தில் பெளலிங்கில் கோலோச்சிய அணி பாகிஸ்தான்!


டிரெண்டிங் @ விகடன்