‘இங்கிலாந்து கண்டிஷன் ; ஹை ஸ்கோரிங் கேம்’ - டிராவிட் சொல்லும் மிடில் ஓவர் ஃபார்முலா | 'Bowling is going to play a very big role in this World Cup' - dravid

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (19/05/2019)

கடைசி தொடர்பு:11:40 (19/05/2019)

‘இங்கிலாந்து கண்டிஷன் ; ஹை ஸ்கோரிங் கேம்’ - டிராவிட் சொல்லும் மிடில் ஓவர் ஃபார்முலா

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் உலகக்கோப்பை தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது.  இந்த முறை இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரை நடத்துகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போட்டிகள் நடைபெறுகிறது.  இதில் ஒவ்வொரு அணியும் எதிரணிக்கு சவால் அளிக்கும் படியாக விளையாடும்.

ராகுல் டிராவிட்

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளும் ஹை ஸ்கோரிங் கேமாகவே அமைந்துள்ளது. இந்த 3 போட்டிகளிலும் 300-க்கும் அதிகமான ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரும் ஹை ஸ்கோரிங் கேமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜூனியர் அணியின் பயிற்சியாளராகவும் உள்ள ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

பும்ரா

ராகுல் கூறுகையில், “ கடந்த ஆண்டு இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. என்னுடைய அனுபவத்தின் படி கண்டிப்பாக இந்த முறை ஹை ஸ்கோரிங் உலகக்கோப்பையாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் மிடில் ஓவரில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பது  முக்கியமானதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டி  தரவரிசையில் நாம் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு அதுவே காரணம். கண்டிப்பாக இந்த உலகக்கோப்பை மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கும். எல்லா அணிகளும் இதற்காகச் சிறப்பாக தயாராகி இருப்பார்கள். உலகக்கோப்பையில் எல்லோரும் தங்களது தடத்தைப் பதிக்க விரும்புவார்கள்.  இந்திய அணியில் பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.  இங்கிலாந்து  மைதானங்களில் மற்ற அணிகள் அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியமானதாகும்.  மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் எதிரணியை கட்டுப்படுத்தினால் இந்திய அணி வெற்றி பெறும்.

தோனி

இந்தத் தொடரில் இந்தியா சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். அரையிறுதிக்குள் கண்டிப்பாக இந்தியா வந்துவிடும். விராட்கோலி தன்னுடைய திறமைகளை வளர்த்து வருகிறார். 2014-ல் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணம் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை.  ஆஸ்திரேலியா பயணமும் அப்படித்தான். ஆனால் இரண்டாவது முறையாக அங்குச் சென்றபோது ஒரு சிறந்த வீரராகச் செயல்பட்டார். இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி இருக்கிறார். அவர் இதுபோன்று நிறையப் பெரிய தொடர்களில் விளையாடியுள்ளார். அவரது அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும்’ எனப் பேசியுள்ளார்.