பாகிஸ்தான் தொடர்ந்து 10 தோல்வி... உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து ரெடி! #ENGvsPAK | England thrash Pakistan to win ODI series

வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (20/05/2019)

கடைசி தொடர்பு:19:34 (20/05/2019)

பாகிஸ்தான் தொடர்ந்து 10 தோல்வி... உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து ரெடி! #ENGvsPAK

"பேட்டிங்கைப் பொறுத்தவரை எங்கள் அணி தயாராக உள்ளது. பெளலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தொடர் தோல்விகளைச் சந்தித்திருந்தபோதும் பாகிஸ்தான் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.’’

பாகிஸ்தான் தொடர்ந்து 10 தோல்வி... உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து ரெடி! #ENGvsPAK

இன்னும் 10 நாள்களில் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடங்கிவிடும். சொந்த ஊரில் நடக்க இருப்பதால், முதல்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்ற இங்கிலாந்து அணி ஆயத்தமாகி வருகிறது. 4 - 0 எனப் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்ற உற்சாகத்தில், மற்ற அணிகளைவிடவும் பலமான அணியாக உலகக் கோப்பைக்குள் நுழைகிறது இங்கிலாந்து அணி. #ENGvsPAK

முதல் போட்டி மழையால் பாதியில் நின்றது. அடுத்த மூன்று போட்டிகளையும் வென்ற இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. ஒவ்வொரு போட்டியிலும் 340+ ஸ்கோரை அடித்தும் பாகிஸ்தானுக்கு வெற்றி மட்டும் கைகூடவேயில்லை. லீட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தபோது, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் பாகிஸ்தானின் சேஸிங்கை தவிடுபொடியாக்கினார். 10 ஓவர்களில், வெறும் 50 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த வோக்ஸ், நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன்!

#ENGvsPAK

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பேர்ஸ்டோ, ரூட், மோர்கன், பட்லர் எனப் பலமான பேட்டிங் லைன் அப் கொண்ட இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 351 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் கிடைத்த வாய்ப்பில் சில பவுண்டரிகளை விளாசியது அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஓப்பனிங் களமிறங்கிய வின்ஸ், பேஸ்ட்ரோ பந்தை வீணாக்காமல் அடித்து ஆடினர். இருவரும் சேர்ந்து 13 பவுண்டரிகளை விளாசிவிட்டு கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். 11-வது ஓவர் முடிவிலேயே 100 ரன்களை எட்டியிருந்தது இங்கிலாந்து அணி. அதற்குப் பின் கேப்டன் மோர்கனும் ஜோ ரூட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் பெளலர்களின் பந்துகளை பவுண்டரிக்குப் பறக்கவிட்டனர். 160 ரன்களைச் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் பாகிஸ்தானின் 19 வயது இளம் வீரர் ஷாயின் ஷா அஃப்ரிடி. இங்கிலாந்து ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டையாக அமைந்து மோர்கனின் விக்கெட்டைத் தொடர்ந்து அடுத்துக் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

#ENGvsPAK

பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பார்த்திருப்போம், ஆனால், நேற்று பாகிஸ்தான் பெளலர்கள் ஷாயின் அஃப்ரிடியும் இமாத் வாசியும் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட்டுகளை எடுத்தனர். ஷாயின் 4 விக்கெட்டுகளும் இமாத் 3 விக்கெட்டுகளையும் எடுக்க, இங்கிலாந்தின் மிடில் ஆர்டரும் லோயர் ஆர்டரும் ரன் எடுக்க முடியாமல் திணறியது. 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஜோஸ் பட்லர் மொக்கைபோட, நான்காவது போட்டியில் மட்டும் பேட்டிங்கில் அசத்திய ஸ்டோக்ஸ் நேற்றைய போட்டியில் மீண்டும் சொதப்பத் தொடங்கினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட்டாகி மொயின் அலி இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடியால், 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.

#ENGvsPAK

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், மூன்று முறை 340+ ரன்களை எளிதாக ஸ்கோர் செய்த பாகிஸ்தான் அணிக்கு 351 ரன் இலக்கு சாத்தியமே. கடைசிவரை போராடும் பாகிஸ்தான் அணி, நூலிழை வித்தியாசத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் இங்கிலாந்திடம் தோல்வியைச் சந்தித்துள்ளதால் நேற்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றி பெறவே நினைத்திருக்கும். கிறிஸ் வோக்ஸின் மிரட்டல் பெளலிங்கால் பாகிஸ்தானின் தோல்வி பரிதாபங்கள் நேற்றைய போட்டியிலும் தொடர்ந்தது. ஓப்பனிங் களமிறங்கிய ஃபகர் ஜமான் டக் அவுட்டாக, வோக்ஸின் முதல் ஓவரிலேயே மெய்டன் விக்கெட். இதனால் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் திணறத் தொடங்கியது இங்கிலாந்துக்குச் சாதகமானது. மூன்றாவது ஓவரை வீச வந்தார் வோக்ஸ். மறுபடியும் விக்கெட்! ஸாரி, விக்கெட்டுகள். அபித் அலி, முகமது ஹஃபீஸ் எல்.பி.டபிள்யூயால் வெளியேற, பாகிஸ்தானின் சேஸிங் கடினமானது.

ஒன் டவுன் இறங்கிய பாபர் அசாம், கேப்டன் சர்ஃபராஸ் அகமது உடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 4-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்ந்தது இந்த ஜோடி. பாபர் அசாம் 80 ரன்களில் அவுட்டாக, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷர்ஃபராஸ் கான் 97 ரன்களில் அவுட்டானர். இருவரும் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அதன்பின் பாகிஸ்தானின் சேஸிங் மந்தமானது. சீனியர் சோயப் மாலிக் 4 ரன்களுக்கு வெளியேற, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வோக்ஸ் 5 விக்கெட்டுகளும் ரஷித் 2 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி ஒரு விக்கெட்டும் எடுக்க 46.5 ஓவர்களிலேயே 297 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது பாகிஸ்தான்! 

#ENGvsPAK

ஐந்தாவது ஒரு நாள் போட்டியை வென்ற இங்கிலாந்து, 4-0 எனத் தொடரையும் கைப்பற்றியது. உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைசி 10 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்திருப்பது குறித்து கேப்டன் ஷர்ஃபராஸ் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். "பேட்டிங்கை பொறுத்தவரை எங்கள் அணி தயாராக உள்ளது. பெளலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தொடர் தோல்விகளைச் சந்திருந்தபோதும் பாகிஸ்தான் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இனி உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி அவர்களைத் திருப்திப்படுத்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

முக்கியமான ஒரு நாள் தொடர்கள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் பெரும்பாலான கிரிக்கெட் அணிகள் இங்கிலாந்துக்கு ஃப்ளைட் ஏறியுள்ளனர். அடுத்த வாரம் இந்நேரம் உலகக் கோப்பை ஜூரம் தொடங்கியிருக்கும்..!


டிரெண்டிங் @ விகடன்