``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup | Three changes in Pakistan worldcup squad

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (21/05/2019)

கடைசி தொடர்பு:09:15 (21/05/2019)

``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup

இங்கிலாந்தில், இம்மாதம் 30 -ம் தேதி தொடங்க இருக்கிறது உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடர். ஏற்கெனவே, இதில் விளையாடும் 10 அணிகளும் தங்கள் வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டபோதிலும், மே 23 -ம் தேதி வரை அதில் மாற்றங்கள் செய்ய முடியும். பாகிஸ்தான் அணி தற்போது, இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்தித்தது.  

பாகிஸ்தான்

இதன் காரணமாக, பாகிஸ்தான் தற்போது தனது உலகக் கோப்பை அணியில் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளது. இடக்கை வேகப்பந்துவீச்சாளர்களான முகமது அமீர் மற்றும் வகாப் ரியாஸ் அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்களுக்காக, ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் ஜுனைட் கான் நீக்கப்பட்டுள்ளனர். இதில், வகாப் ரியாஸ் அனுபவ பந்துவீச்சாளர். ஆனால், பாகிஸ்தான் அணிக்காக அவர் கடைசியாக ஒருநாள் போட்டியில் ஆடியது 2017 -ம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ள ஜுனைட் கான் ட்விட்டர் பக்கத்தில், தனது வாயை ப்ளாஸ்டர் போட்டு ஒட்டியபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து,  ``எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். உண்மை கசக்கும்” என்று பதிவிட்டிருந்தார். 

பாகிஸ்தான் அணியில் மூன்றாவது மாற்றமாக, அபித் அலிக்குப் பதிலாக ஆசிஃப் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த ஆசிஃப் அலி, மிடில் ஆட்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு அரை சதம் அடித்தார். அவரது அதிரடியான ஆட்டம், பாகிஸ்தானுக்கு தேவை என தேர்வுக் குழுவின் தலைவர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். 

ஆசிஃப் அலி

இந்த அறிவிப்பு வரும் சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், ஆசிஃப் அலியின் இரண்டு வயது குழந்தை இறந்துவிட்ட செய்தி அவருக்குக் கிடைத்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்த சில மணி நேரத்தில், அமெரிக்காவில் புற்றுநோய்க்காக  சிகிச்சைபெற்றும்வரும் அவரது மகள் இறந்துவிட்ட செய்தி கேட்டு அமெரிக்கா புறப்பட்டார். 

இன்சமாம் உல் ஹக்

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணியில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய இன்சமாம், ``அபித் அலியை அணியில் இருந்து நீக்குவது என்ற முடிவு சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால், 6-7 இடங்களில் அணிக்கு அதிரடியாக விளையாடும் ஒருவர் தேவைப்படுகிறார். அதுமட்டுமல்லாது, ஆசிஃப் அலி இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடியுள்ளார். 

ஆசிஃப் தற்போது அமெரிக்கா சென்றிருக்கிறார். பாகிஸ்தான் அணி விளையாடும் பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னதாக அவர் இங்கிலாந்து திரும்புவார் என நம்புகிறோம். காரணம் பயிற்சி ஆட்டம் முதலே முழு பலத்துடன் இறங்கத் திட்டமிட்டுள்ளோம். ஒருவேளை அவர் வரத் தாமதமானால், அவர் வரும்வரை காத்திருப்போம்” என்றார்.