`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்!' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி | Moeen Ali request to the fans regarding WC

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (21/05/2019)

கடைசி தொடர்பு:15:45 (21/05/2019)

`அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்!' - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மொயீன் அலி

உலகக்கோப்பை தொடர்பாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

மொயீன் அலி

Photo Credit: Twitter/@PCA

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 9 நாள்கள்தான் இருக்கிறது. ஆனால், கிரிக்கெட் ஃபீவர் எப்போதோ தொடங்கிவிட்டது. அணித்தேர்வில் எழுந்த சர்ச்சைகள் குறித்துப் பேசுவது தற்போது குறைந்துவிட்டது. அனைவரது கவனமும் தொடரில் எப்படிச் சிறப்பாக செயல்படுவது என்பதில்தான் உள்ளது. 

முன்னதாக ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு உலக கவனம் பெற்றது. காரணம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்த வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்புவார்களா என்ற கேள்வி இருந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போன்றே அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் இடம்பிடித்தனர். 

ஸ்மித், வார்னர்

Photo credits: Cricket Australia

ஓராண்டு தடைக்குப் பின்னர் மீண்டும் ஆஸ்திரேலிய சீருடையில். அதுவும் உலகக்கோப்பை தொடரில் களம்காணவுள்ளனர் வார்னர் மற்றும் ஸ்மித். வார்னர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஃபார்மில் இருந்தார். ஸ்மித் பயிற்சி ஆட்டத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர், ஸ்மித் மற்றும் வார்னரை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் இருவரையும் மன ரீதியாக அமைதியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். உலகக்கோப்பை தொடர் நடப்பது இங்கிலாந்து மண்ணில். கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணியும் பரம எதிரிகள் என்பது உலகறிந்த ஒன்றுதான். போட்டி என்பதைத் தாண்டி ஸ்லெட்ஜிங் என்னும் ஆயுதத்தை ரசிகர்கள் செய்வது உண்டு. களத்தில் விளையாடும் வீரர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து அவர்கள் கவனத்தைச் சிதறச் செய்யும் வித்தையெல்லாம் இருநாட்டு ரசிகர்களும் சர்வ சாதாரணமாகச் செய்வார்கள். 

இந்த நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் அணிக்குத் திரும்புவது குறித்து கார்டியன் பத்திரிகைக்குப் பேசிய இங்கிலாந்து அணியின் ஆல் - ரவுண்டர் மொயீன் அலி, ``ஸ்மித், வார்னர் இந்தத் தொடரில் அனுபவித்து விளையாட வேண்டும். அவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கக் கூடாது. நாமெல்லாம் மனிதர்கள். அனைவரும் தவறுகள் செய்வோம். அவர்கள் இருவரும் நல்லவர்கள்தான். அவர்கள் இங்கு நல்லபடியாக நடத்தப்படுவார்கள் என நம்புகிறேன். இங்கு  கிரிக்கெட்தான் பேசப்பட வேண்டும்” என்றார்.