`இந்த உலகக் கோப்பை தொடர் சவாலானதாக இருக்கும்!' - விராட் கோலி | most challenging World Cup due to round robin format, says Indian captain Virat Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (21/05/2019)

கடைசி தொடர்பு:20:41 (21/05/2019)

`இந்த உலகக் கோப்பை தொடர் சவாலானதாக இருக்கும்!' - விராட் கோலி

`இந்த உலகக் கோப்பை தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

இந்திய அணி உலகக் கோப்பைக்குத் தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றிரவு லண்டன் செல்கிறது. முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட்கோலி மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது உலகக் கோப்பை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர். இந்தியா உலகக் கோப்பைக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தை நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் ஆட இருக்கிறது. முதன்முறையாக ஒவ்வோர் அணியும் மற்ற அணியுடன் மோதும் ரவுண்ட் ராபின் ஃபார்மெட்டுடன் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது.

கோலி

இந்த ஃபார்மெட்டில் விளையாடுவது சவால் நிறைந்ததாக இருக்கும் என கோலி கருத்து தெரிவித்திருக்கிறார். ``இந்த உலகக் கோப்பை தொடர் சவால் நிறைந்ததாக இருக்கப்போகிறது. மற்ற அணிகளும் திறனுடன் உள்ளன. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒவ்வோர் ஆட்டமும் நமது திறமைக்கான சிறந்த விளையாட்டாக அமையும். நம்பிக்கையுடன் உலகக் கோப்பை தொடர் விளையாடச் செல்கிறோம். நெருக்கடிகளை சமாளிப்பதே முக்கியமானதாக இருக்கும். எங்கள் பந்துவீச்சாளர்கள் மத்தியில் புத்துணர்ச்சி நிலவுகிறது. யாரும் சோர்வாக இல்லை. அதிக ரன்களைக் குவிக்கும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நான் பங்கேற்ற மூன்று உலகக் கோப்பையில் இந்தத் தொடர் சவலாக இருக்கும்” என்றார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சௌதாம்ப்டன் மைதானத்தில் இந்தப் போட்டி ஜூன் 5-ம் தேதி நடக்கிறது.

ரவி சாஸ்திரி

ரவிசாஸ்திரி பேசுகையில், ``கடந்த காலத்தைக் காட்டிலும் இந்த உலகக் கோப்பை சவாலாக இருக்கும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள்கூட தற்போது வலுவாக உள்ளன. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாதிப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். களத்தில் 100 சதவிகிதம் திறமையை வெளிப்படுத்துவோம். இந்தத் தொடரில் தோனிக்கு மிகப்பெரிய ரோல் உண்டு. விராட் கோலியுடனான அவரது கம்யூனிகேசன் சிறப்பாக உள்ளது. விக்கெட் கீப்பங்கில் அவரைவிட சிறப்பானவராக மற்ற யாராலும் இருக்க முடியாது. அவர் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறந்த வீரராக இருப்பார்’' என்றார்.