``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்!” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர் | I'd quite like to get Virat out - Jofra Archer

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (22/05/2019)

கடைசி தொடர்பு:09:20 (22/05/2019)

``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்!” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர்


உலகக் கோப்பையில் ஆடவேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. இளம்வீரர்களுக்கு அவ்வளவு எளிதில் இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இங்கிலாந்து அணிக்காக 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட பட்டியலில் ஆர்ச்சரின் பெயர் இடம்பெறவில்லை. நேற்று மீண்டும் அறிவிக்கப்பட்ட அணி வீரர்கள் பட்டியலில் 3 வீரர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர், வின்ஸ், டாவ்சன் ஆகியோர்அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அர்ச்சர், இங்கிலாந்து அணியில் இந்த வருடம்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துப் பேசியுள்ள ஆர்ச்சர், “ எட் ஸ்மித்திடம் இருந்து அழைப்பு வரும்போது 6 மணி இருக்கும். நான் அப்போது டிரைவிங்கில் இருந்தேன். ஃபோனை வைப்ரேட் மோடில் போட்டியிருந்தேன். அழைத்தது யாரென்று பார்க்காமல் நானும் பேசினேன். அது அற்புதமான மாலை. எனக்கு அந்த மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கப்பட்டது.  இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது என்பது உற்சாகமான விஷயம். நான் தயாராக இருக்கிறேன். நான் ஐபிஎல் போன்ற நிறையத் தொடர்களில் விளையாடியுள்ளேன். ஒரு நாள் போட்டிகளில் கூடுதலாக 6 ஓவர்கள் கிடைக்கும். இங்கு எப்படிப் பந்துவீச வேண்டும் என கணித்து விக்கெட்டுகளை வீழ்த்தமுடியும். அணியில் இருக்கும் மற்ற வீரர்களைக்காட்டிலும் எனக்கு  சில சாதகமான விஷயங்கள் இருக்கிறது. இங்கு ஆடவரும் வீரர்களுடன் ஐபிஎல் போட்டிகளில் நிறைய விளையாடியிருக்கிறேன். அதன் காரணம், அவர்களது பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். யாரால் ஓட முடியும், யார் வேகமாக ரன்களைச் சேர்ப்பார்கள் போன்ற தகவல்கள் தெரியும்.

ஐபிஎல் கிரிக்கெட்

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் என்ன தீவிரம் இருக்கிறதோ ஐபிஎல் தொடர்களிலும் அதே தீவிரம் உண்டு. ஓவர்கள் மட்டுமே இங்கு வித்தியாசப்படுகிறது. அங்கு அதிகமான அழுத்தம் காணப்படும். இங்கிலாந்து ஒரு அற்புதமான அணி. சிறந்த வீரர்கள் இங்கு உள்ளனர். சிறந்த கேப்டன், அற்புதமான கோச் மற்றும் ஊழியர்கள் இருக்கிறார்கள். 

விராட் கோலி

இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஆர்வமாக இருக்கிறேன். ஐபிஎல் தொடரில் கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அவர் விளையாடிய போட்டிகளில் லெக் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்துவிட்டார். டிவில்லியர்ஸுக்கு பந்துவீச வேண்டும் என ஆசை. அது உலகக் கோப்பையில் சாத்தியமில்லை. அவர், தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடவில்லை. இந்தப் பட்டியலில் கெய்ல் இருக்கிறார். அவரது விக்கெட்டை வீழ்த்த ஆசைப்படுகிறேன். 

கெய்ல்


ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் நெட் பிராக்டிஸ் போது அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அற்புதமான வீரர். அவரும் மிஸ்டர் 360 டிகிரி கிரிக்கெட்டர்தான். ஆனால், பேட்டிங்கின்போது அவருடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ஐபிஎல்லில் பென் ஸ்டோக்ஸுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. உலகக் கோப்பையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போது, எதிரில் ஸ்டோக்ஸ் போன்று தெரிந்த வீரர் இருந்தால், அது பதற்றத்தைத் தணிக்கும்.

ஆஷஸ் தொடருக்கு மட்டும் என்னைத் தேர்வுசெய்தால், நான் நிலாவுக்கே சென்றுவருவேன், என்னைக் கையில் பிடிக்க முடியாது. நான் இப்போது உலகக் கோப்பை தொடருக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளேன். எனது கவனம் இப்போது அதன்மீதுதான் உள்ளது” என்கிறார் ஆர்ச்சர்.