`உலகக் கோப்பையில் 500 ரன்கள்கூட சாத்தியம்தான்!' - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்லும் லாஜிக் #CWC19 | 500 runs could be possible this WC, says Mark Waugh

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (22/05/2019)

கடைசி தொடர்பு:13:00 (22/05/2019)

`உலகக் கோப்பையில் 500 ரன்கள்கூட சாத்தியம்தான்!' - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்லும் லாஜிக் #CWC19

நடப்பு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் என்ற மைல்கல் எட்டப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் தெரிவித்திருக்கிறார். 

உலகக் கோப்பை

Photo credit: Twitter/@TheBarmyArmy

ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்ற பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக இங்கிலாந்து ஆடுகளங்களில் 300 ரன்களுக்கு மேல் குவிப்பது சர்வசாதாரணம் என்ற நிலைதான் இருக்கிறது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடரை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை ஜெர்ஸி

Photo credit: Twitter/@TheBarmyArmy

அந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 373/3, 359/4, 341/7 மற்றும் 351/9 என 4 முறை 300 ரன்களைக் கடந்தது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் லண்டனில் நடைபெற்ற போட்டி கைவிடப்பட்ட நிலையில், 4 போட்டிகளிலும் இங்கிலாந்து 300 ரன்களைக் கடந்தது. அதேபோல், பாகிஸ்தான் அணியும் சௌதாம்டனில் 361/7, பிரிஸ்டோல் போட்டியில் 358/9 மற்றும் நாட்டிங்ஹாம் போட்டியில் 340/7 என்று 3 முறை 300 ரன்களைத் தாண்டியது. இதனால், இந்த உலகக் கோப்பை தொடரில் 300 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான காரியமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறிவிட்டன என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். 

மார்க் வாக்

Photo Credit: Cricket.com.au

இந்தநிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் என்ற மைல்கல் எட்டப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ள அவர், ``500 ரன்கள் என்று கூறும்போது, அது சாதிக்கவே முடியாதது போல் தோன்றலாம். 50 ஓவர்களில் 500 ரன்கள் எடுக்க முடியும் என்று நீங்கள் நம்பாமல் இருக்கலாம், ஆனால் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். வலிமையான அணி, வீக்கான அணிக்கெதிராக இந்தச் சாதனையை உலகக் கோப்பை தொடரில் படைக்கும் என நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு இது கடினமானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார். 

தற்போதைய சூழலில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனை இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வசமே இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அந்த அணி, 481 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.