`இந்தியா புதிய உயரங்களைத் தொடப்போகிறது!' - மோடிக்கு சச்சின், கோலி வாழ்த்து | Sachin, virat kohli wishes modi over election victory

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (24/05/2019)

கடைசி தொடர்பு:15:14 (24/05/2019)

`இந்தியா புதிய உயரங்களைத் தொடப்போகிறது!' - மோடிக்கு சச்சின், கோலி வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார். 

மோடி - கோலி

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படும் இந்தியாவின் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நம் நாட்டில் இந்த முறை 67.11 சதவிகித வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. 542 மக்களவைத் தொகுதிகளில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்க இருக்கிறது. அதேநேரம், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் பா.ஜ.க-வுக்குக் கிடைத்தது அதிர்ச்சியே. இந்தி பேசும் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க வலுவாக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேபோல், மேற்குவங்கத்தில் எதிர்பாரா வெற்றியைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. 

தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்க இருக்கும் மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட பல்துறையைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை மோடிக்குத் தெரிவித்து வருகிறார்கள். 

சச்சின் வாழ்த்தும் மோடியின் பதிலும்

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், `மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ-கவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிமயமான மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்குவதில் நாடு என்றுமே உங்களுக்குத் துணை நிற்கும்' என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, `உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சச்சின். நாட்டின் முன்னேற்றத்துக்காக கடந்த 5 ஆண்டுகளில் நிறைய வேலைகளைச் செய்திருக்கிறோம். அதற்காக இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. மிகுந்த அக்கறையுடன் நாங்கள் நாட்டுக்காக சேவை செய்வோம்' என்று குறிப்பிட்டிக்கிறார். 

விராட் கோலி வாழ்த்து

அதேபோல், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, `வாழ்த்துகள் நரேந்திர மோடிஜி. உங்கள் தொலைநோக்குப் பார்வையால் இந்தியா பல்வேறு புதிய உயரங்களைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று வாழ்த்துக் கூறியிருக்கிறார். இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.