`அவருக்கு எப்போது உதவி தேவையோ அங்கு நான் இருப்பேன்!'- கோலி கேப்டன்ஷிப் குறித்து ரோஹித் ஷர்மா | rohit sharma talks about kohli captaincy

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (24/05/2019)

கடைசி தொடர்பு:17:47 (24/05/2019)

`அவருக்கு எப்போது உதவி தேவையோ அங்கு நான் இருப்பேன்!'- கோலி கேப்டன்ஷிப் குறித்து ரோஹித் ஷர்மா

``கோலிக்கு எப்போது உதவி தேவைப்படுகிறதோ அப்போது நான் அங்கு இருப்பேன்'' என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

கோலி - ரோஹித் ஷர்மா

இந்த மாதத்தில் மிகவும் எதிர்பார்த்த இரண்டு விஷயங்களில் ஒன்றான அரசியல் ஆட்டத்தின் ரிசல்ட் நேற்று தெரிந்துவிட்டது. இன்னொரு எதிர்பார்ப்பான உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அதற்கு முன்னதாக நாளை நியூசிலாந்துடன் வார்ம் அப் மேட்ச்சில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சிக்கு நடுவில் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து துணை கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும், உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்தும் பேசியுள்ளார். 

கோலி - ரோஹித்

அதில், ``கடந்த சில வருடங்களாக ஒரு கேப்டனாக விராட் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலிக்கு இந்த முறை ஒரு சிறந்த அணி கிடைத்துள்ளது. கோலிக்கு எப்போது உதவி தேவைப்படுகிறதோ அப்போது நான் அங்கு இருப்பேன். எனது பங்களிப்பு எப்போதும் அவருக்காக இருக்கும். ஏதுவாக இருந்தாலும் அணிக்குத்தான் முதல் முன்னுரிமை. அணியை மேம்படுத்தக் கோலி என்ன கேட்டாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

கோலி - ரோஹித்

ஒரு அணிக்கு டாப் 3 பேட்ஸ்மேன்கள் சேர்க்கும் ரன்கள் மிக முக்கியமானது. இந்தியாவுக்கு தவான், கோலி, நான் என மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மூவர் சேர்க்கும் ரன்கள் எல்லா ஆட்டங்களுக்கும் தேவையானது. நான் நேற்று முடித்துவிட்டேன். நீ இன்று அடி யாரும் சொல்ல முடியாது. டாப் ஆர்டரில் இருக்கும் நாங்கள் மூவரும்தான் அணிக்குத் தேவையானதை செய்ய முடியும். எல்லா ஆட்டங்களிலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

கோலி 

அதேபோல் பௌலிங்கில், வெரெட்டியான பௌலர்கள் இருக்கிறார்கள். பகுதி நேர பௌலர்கள், முழு நேர பௌலர்கள் என ஒரு சிறந்த பௌலிங் அட்டாக்கை வைத்துள்ளோம். இதில் விராட் தேர்வு செய்வதற்கு நிறையவே உள்ளன" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க