`மனுஷனா ரன் மெஷினா!’ - கோலியை புகழும் பிரைன் லாரா | Virat Kohli Is Not Human, He's A Machine says brain lara

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (25/05/2019)

கடைசி தொடர்பு:08:50 (25/05/2019)

`மனுஷனா ரன் மெஷினா!’ - கோலியை புகழும் பிரைன் லாரா

விராட் கோலி

என்னா அடி அடிக்கிறான்.... கிரிக்கெட்டில் பொதுவான இந்த வார்த்தைக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே சொந்தக்காரர்களாக இருப்பார்கள். டி-20 போன்ற தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருந்தால் அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம். கண்டிப்பாக ஸ்கோர் 200 ரன்களை தாண்டிவிடும். பந்துகள் எல்லாம் சிக்ஸர்களாகத் தான் பறக்கும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட ரஸல், கெய்ல் அதிரடியில் மிரட்டினர். ஆனால் முதலில் கூறிய அந்த வார்த்தைக்குச் சொந்தக்காரர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அல்ல இந்திய வீரர் விராட் கோலி. இதனை கூறியது வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா.

லாரா

உலகக்கோபை தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள லாரா, ``விராட்கோலிக்கு இது மூன்றாவது உலகக்கோப்பை. அணித்தலைவராக அவர் பங்கேற்கும் முதல் உலகக்கோப்பை தொடர் இது. 1980- 90 அந்தக்காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் கோலி ஒரு வித்தியாசமான வீரர். அவர் ரன் மெஷின் போல் செயல்படுகிறார். தன்னால் முடிந்தவரை ரன்களை குவிக்கிறார். ஃபிட்னஸ் என்பது முக்கியமான விஷயம். சச்சின் டெண்டுல்கரையும், கோலியையும் ஒப்பீடு செய்ய மாட்டேன்.  கோலியிடன் சிறப்பாக விஷயங்கள் இருக்கிறது. இளம்கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.  இந்திய அணி  கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்கள் ஆடும் விதத்தை பார்க்கும்போது உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் பந்துவீச்சு மிகவும் முக்கியமானது. 

பும்ரா சிறந்த பந்துவீச்சாளர். அவருடன் கோலி களமிறங்குவது சாதகமான விஷயம். பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அட்டாகிங் பந்துவீச்சாளர் வரும் போது பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக்கை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பந்துவீச்சாளர்களுக்குக் கடினமாக இருக்கும். நான் பும்ராவின் பந்துவீச்சை எதிர்க்கொண்டால் முதலில் எனது ஸ்ட்ரைக்கை மாற்றிவிடுவேன். பும்ராவிடம் நல்ல ஆக்‌ஷன் இருக்கிறது. அவர் இந்தியாவின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர். 

பும்ரா

இங்கிலாந்தின் காலநிலையை உங்களால் கணிக்க  முடியாது. அந்த ஆடுகளங்கள் சில நேரங்களில் வேகப்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும்.  இந்திய அணி ஒரு கலவையாக உள்ளனர். அவர்களிடம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களால் அந்த சுழ்நிலைக்கு ஏற்ப செயல்பட முடியும். சிறப்பாக செயல்படும் எந்த அணியும் கோப்பையை வெல்லும். என்னுடைய கணிப்பின் படி இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. கடந்த சில வருடங்களாக அவர்கள் விளையாடிவரும் விதத்தை வைத்து கூறுகிறேன்.

ஸ்மித், வார்னர் ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பி இருப்பது அவர்களுக்கு சாதகமான விஷயம்.இருவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். ஆஸ்திரேலியா அணி தோல்விகளில் இருந்து மீண்டு வருகிறது. ஆனால் இந்தியா, இங்கிலாந்து அணிக்கு அபாரமான ஃபார்மில் இருக்கிறார்கள்.

ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ்  அணியில் திறமைவாய்ந்த இளம்வீரர்கள் இருக்கிறார்கள். பிரச்னை என்னவென்றால் சர்வதேச தொடர்களில் அவர்கள் சிறப்பாக செயல்படத் தவறுகின்றனர். திறமை இல்லாமல் இல்லை அதனை வெளிப்படுத்தாதே பிரச்னையாக உள்ளது.  உலகக்கோப்பை சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். அரையிறுதிக்குள் மூன்றாவது அல்லது நான்காவது அணியாக நுழையவார்கள். இதில் வெற்றி பெற்று உள்ளே சென்றுவிட்டார்கள் என்றால் கண்டிப்பாக எந்த அணியாக இருந்தாலும் வீழ்த்திவிடுவார்கள். நாக் அவுட் சுற்றுக்குள் சென்று விட்டால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.