`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்!’ - ஜடேஜா | Nothing to worry, says Jadeja 

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:30 (26/05/2019)

`இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ளவேண்டாம்!’ - ஜடேஜா

 ஜடேஜா

 உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் வீழ்ந்தது. போல்ட் பந்துவீச்சில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். பாண்ட்யாவின் 30 ரன்னும், ஜடேஜாவின் அரைசதமும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. 39.2 ஓவர்களுக்கு 179 ரன்களில் இந்திய அணி ஆல்-அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இங்கிலாந்து சூழல் வேகப்பந்துவீச்சு நன்கு ஒத்துழைப்பு தந்தது. நியூசிலாந்து வீரர்கள் அதனைச்  சரியாகப்பயன்படுத்திக்கொண்டனர். இது பயிற்சிப்போட்டி என்பதால் இந்திய வீரர்கள் இதனைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

போல்ட்

போட்டிக்குப் பின்னர் பேசிய ஜடேஜா, “ இது எங்களுடைய முதல் போட்டி தான். இந்த ஒரு போட்டியை வைத்து வீரர்களை எடைபோட முடியாது. இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ள வேண்டாம். இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வந்து விளையாடும் போது இந்த பிட்ச் சற்று கடினமானதாகத் இருக்கும். இதுதொடர்பாக நிறையப் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம். இந்த பிட்ச் கடினமானதாக இருக்கும் எனத் தெரியும். அதனால் தான்  முதலில் பேட்டிங் தேர்வு செய்தோம். பயிற்சி போட்டிகளில் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது நல்லது தான். நாங்கள் இதனை சவாலாக தான் எடுத்துக்கொண்டோம்.

குல்தீப் யாதவ்

நாங்கள் சிறப்பாக செயல்படுவோம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.  எங்கு விளையாடினாலும் சிறப்பாக விளையாட வேண்டும்.  இது உலகக்கோப்பை தொடர் என தேவையில்லாமல் என் மீது நானே அழுத்தத்தை தர விரும்பவில்லை. இந்தப்போட்டியில் நிறைய ஓவர்கள் இருந்ததால் எனக்கு அவசரமாக ஆட வேண்டிய சூழல் இல்லை. நிதானமாக என்னை நிலைநிறுத்திக்கொண்டு விளையாடினேன்.அவசரகதியிலான ஷாட்டுகளை ஆட வில்லை. அது எனக்கு உதவிகரமாக இருந்தது.  பேட்டிங்கிற்காக ஐபிஎல் தொடரின் போதே நிறைய  பயிற்சி மேற்கொண்டேன். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வலைபயிற்சியில் பேட்டிங் டெக்னிக் மற்றும் ஷாட் தேர்வுகள் குறித்து பயிற்சி மேற்கொண்டேன்” எனப் பேசினார்.