`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்!' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக் | sanjay manjarekar speaks about India's No.4 problem

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:20 (27/05/2019)

`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்!' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நான்காவது வீரராகக் களமிறங்க கே.எல்.ராகுலைவிட விஜய் சங்கரே பொருத்தமாக இருப்பார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். 

விஜய் சங்கர்

Photo Credit: BCCI

உலகக் கோப்பை திருவிழா இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. அந்தத் தொடருக்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள உலகின் டாப் 10 அணிகள் பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணியின் முதல் பயிற்சிப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே, நியூசிலாந்து அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 

இந்திய அணி, உலகக் கோப்பை தொடருக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே நான்காவது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற விவாதம் பெரிய அளவில் பேசப்பட்டது. அம்பாதி ராயுடுவுக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த விஜய் சங்கருக்கே அந்த வாய்ப்பை வழங்கலாம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அந்தவரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கரும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். 

சஞ்சய் மஞ்சரேக்கர்

அவர் கூறுகையில், ``நான்காவது வீரராக விஜய் சங்கர் களமிறங்க வேண்டும். அந்தச் சூழலில் ஏற்படும் அழுத்தங்களை அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஏனெனில் ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கவே பொருத்தமாக இருப்பார். அரிதாகவே அவர் நான்காவது வீரராகக் களமிறங்கியிருக்கிறார். அவர் நான்காவது வீரராகக் களமிறங்குகையில், அந்த இடத்துக்குப் பொருத்தமானவராக அவர் எனக்குத் தெரியவில்லை. தொடக்க வீரர்களுக்கு மாற்றாகவே அவர் இருப்பார் என்று எண்ணுகிறேன். 

கே.எல்.ராகுல்

நான், ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், நான்காவது வீரராகக் களமிறங்குபவர் சூழ்நிலைக்குத் தக்கவாறு விளையாட வேண்டும். ஃபீல்டிங் இடைவெளிகளில் பந்தை தட்டிவிட்டு ரன் எடுப்பவராகவும், சுழற்பந்துவீச்சைத் திறம்பட எதிர்க்கொள்பவராகவும் இருக்க வேண்டும். 20/2 அல்லது 220/2 என எந்தச் சூழலையும் கையாளும் திறன் படைத்தவராக விஜய் சங்கர் இருக்கிறார். ராகுல் தொடக்கவீரராகவும் விஜய் சங்கர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். 

விராட் கோலி

Photo Credit: ICC

இந்திய அணியின் நம்பர் 4 பிரச்னைக்கு கேப்டன் கோலியிடமும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடமும் முறையான பதிலில்லை என்பது நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியின்போது கண்கூடாகத் தெரிந்தது. கே.எல்.ராகுலை நான்காவது வீரராகக் களமிறக்கவே, அவர் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 6 ரன்களுடன் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். வலைப் பயிற்சியின்போது கலீல் பந்துவீச்சை எதிர்கொண்ட விஜய் சங்கர், கையில் காயமடைந்தார். அதனால், நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் களமிறங்கவில்லை. ஆனால், அவரது காயம் சீரியஸானதில்லை என பிசிசிஐ விளக்கமளித்திருக்கும் நிலையில், வங்கதேச அணிக்கெதிராக நாளை மறுநாள் (மே 28) நடைபெறும் பயிற்சிப் போட்டியில் விஜய் சங்கர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.