`மெல்போர்னில் தோனி சொன்ன அந்த வார்த்தைகள்...!' - விஜய் சங்கர் பகிர்ந்த நாஸ்டால்ஜியா மொமன்ட் | Vijay shankar shares his first ODI moments

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (27/05/2019)

கடைசி தொடர்பு:12:40 (27/05/2019)

`மெல்போர்னில் தோனி சொன்ன அந்த வார்த்தைகள்...!' - விஜய் சங்கர் பகிர்ந்த நாஸ்டால்ஜியா மொமன்ட்

கடினமான சூழ்நிலைகளில் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கூறியிருக்கிறார். 

தோனியுடன் விஜய் சங்கர்

Photo Credit: BCCI

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, டூப்ளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்க்கொள்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை ஜூன் 5-ம் தேதி சந்திக்கிறது. போட்டிக்கு முன்னதாக 2 பயிற்சிப் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராகக் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வரும் 28-ம் தேதி நடைபெறும் பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை தொடரில் அம்பாதி ராயுடுவுக்குப் பதிலாகத் தேர்வு செய்யப்பட்ட தமிழக வீரர் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடவில்லை. காயத்தில் இருந்து அவர் மீண்டுவிட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ள நிலையில், நாளை நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் சங்கர்

இந்த நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் கௌரவ் கபூருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி குறித்தும் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவரது பங்களிப்பு குறித்தும் விஜய் சங்கர் மனம் திறந்திருக்கிறார். அந்தப் பேட்டியில், கடினமான சூழல்களையும் அமைதியாக எதிர்க்கொள்வது குறித்த அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஜய் சங்கர், ``உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை நான் மகேந்திரசிங் தோனியிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். `அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தால் எந்தச் சூழலையும் நம்மால் கையாள முடியும். உன்னுடைய வேலையில் நீ கவனம் செலுத்தினாலே, மற்ற விஷயங்கள் தன்னால் நடக்கும்' என்று தோனி என்னிடம் சொன்னார். 

தோனி

Photo Credit: BCCI

மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டிதான் என்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. மெல்போர்ன் மைதானம் மிகப்பெரியது. அதுபோன்ற மிகப்பெரிய மைதானங்களில் அதற்கு முன் நான் விளையாடிதில்லை என்பதால், அந்த மைதானத்துக்குள் செல்வதே எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது. பந்துவீசும் வாய்ப்பு எனக்கு வந்தபோது, என் மீது பெரிய அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தேன். அப்போது என்னிடம் வந்த தோனி, `எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டாம். சரியான லென்த்தில் பந்தை வீசு' என்றார். அது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அது தேவையானதாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீச தோனியின் நம்பிக்கை எனக்கு உதவியது'' என்றார். இந்திய அணிக்காக இதுவரை 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள விஜய் சங்கர், இந்த உலகக் கோப்பையில் பெரிய அளவில் சோபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.