`இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர்' - பாகிஸ்தானுக்கு கைகொடுக்குமா பழைய ராசி? #CW19 | Pakistan records its second lowest score in worldcup

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (31/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (31/05/2019)

`இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர்' - பாகிஸ்தானுக்கு கைகொடுக்குமா பழைய ராசி? #CW19

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிவிட்டன. முதல் போட்டியில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கிவைத்தது இங்கிலாந்து அணி. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நாட்டிங்கம் ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டிங் தேர்வு செய்ய, பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் களமிறங்கினர். 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பை ரெக்கார்டில் தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது #CW19

   #CW19

முதல் இன்னிங்ஸின் ஒவ்வொரு 10 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, 21.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி. மிரட்டலாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸின் ஒஷான் தாமஸ், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரஸல் 2 விக்கெட்டுகளும் எடுக்க 105 ரன்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான் அணி. எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு யூனிவெர்ஸல் பாஸ் கிறிஸ் கெய்ல் முதல் போட்டியில் அரை சதம் விளாசினார். அவரின் அரை சதத்தின் உதவியுடன் வெஸ்ட் இண்டீஸ் 13.4 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

1992 உலகக்கோப்பை

இதற்கிடையே இது உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர்! இதற்கு முன் 1992-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனினும், அந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் வெற்றி தோல்வியின்றி போட்டி முடிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் அணி கடைசியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

2019-ம் ஆண்டு, மீண்டும் குறைந்தபட்ச ஸ்கோருடன் உலகக் கோப்பையைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணி, இனி வரும் போட்டிகளில் சுதாரித்துக்கொண்டால் மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிபெற முடியும். காத்திருப்போம்!