ஃபிரில் சட்டை முதல் ப்ளூ சட்டை வரை... கிரிக்கெட் ஜெர்ஸியின் பரிணாம வளர்ச்சி! | From frilled shirt to blue tshirt the evolution of cricket jersey

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (01/06/2019)

கடைசி தொடர்பு:09:07 (01/06/2019)

ஃபிரில் சட்டை முதல் ப்ளூ சட்டை வரை... கிரிக்கெட் ஜெர்ஸியின் பரிணாம வளர்ச்சி!

ஃபிரில் சட்டை முதல் ப்ளூ சட்டை வரை... கிரிக்கெட் ஜெர்ஸியின் பரிணாம வளர்ச்சி!

`கிரிக்கெட், ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. அதனால் வெள்ளை நிற ஆடையில்தான் விளையாட வேண்டும்' என்கிற பிம்பம் பரவலாகப் பரவியிருந்த காலகட்டம் அது. இதுதான் கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பர்ய உடை எனப் பலரால் போற்றப்பட்டாலும், இது முற்றிலும் மூடநம்பிக்கைகளின் நிழல் என்கிற வாதமும் ஒரு பக்கம் முன்வைக்கப்பட்டது. தற்போது வெவ்வேறு வண்ணங்களில் சீருடை அணிந்து விளையாடப்படும் இந்த விளையாட்டு, உண்மையில் ஜென்டில்மேன் விளையாட்டா, வெள்ளை உடையில்தான் விளையாடப்பட வேண்டுமா, வெவ்வேறு வண்ணங்களில் சீருடைகள் எப்போது தோன்றின? பார்க்கலாம்...

கிரிக்கெட்

18-ம் நூற்றாண்டில்தான், முதல்முதலாக முறைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் அறிமுகமானது. அப்போது, ஃபிரில்கள் இணைக்கப்பட்ட சட்டை, நன்கீன் கால்சட்டை, பட்டு மெட்டீரியலில் ஆன `ஸ்டாக்கிங்ஸ்' எனப்படும் காலுறைகள், பக்குள் ஷூ மற்றும் வெள்ளி அல்லது கோல்டு நிற லேஸ் பொருத்திய ஜாக்கி அல்லது மும்முனைத் தொப்பி போன்றவற்றை அணிந்து விளையாடினர். இங்கிலாந்தின் பழைமைவாய்ந்த `The Hambledon Club', `CC' என்று பதிக்கப்பட்ட பட்டன் பொருத்திய நீல வண்ண Coat-ஐ பயன்படுத்தினார்கள். 

Cricket

19-ம் நூற்றாண்டின் இடையில் கால்சட்டை, முழு கால்சட்டையாக மாறியது. ஆனாலும், சிலர் பாரம்பர்ய உடை எனக் கருதிய கால்சட்டையைத்தான் உடுத்தி விளையாடினார்கள். பொதுவாக, அந்தக் காலத்தில் இருந்த வீரர்கள் மைதானத்துக்குச் செல்லும்போது, உயரமான beaver hats அதாவது மந்திரவாதிகள் பயன்படுத்தும் நீண்ட கறுப்பு அல்லது வெள்ளை நிறத் தொப்பியை அணிந்துதான் செல்வார்கள். விரைவிலேயே, சஸ்பெண்டர்ஸ், பெல்ட், கறுப்பு நிற ஆக்ஸ்ஃபோர்டு ஷூ, சட்டைகளில் இருந்த ஃபிரில்ஸுக்குப் பதிலாக உயர்த்தப்பட்ட காலர் மற்றும் `Bow' இணைத்து உடுத்த ஆரம்பித்தனர்.

1850-களில் உயரமான தொப்பி மறைந்து, இன்று வீரர்கள் பரவலாகப் பயன்படுத்தும் flannel மற்றும் straw (அம்பையர் அணியும் தொப்பி) தொப்பிகள் களமிறங்கின. 1812-ம் ஆண்டு, பிளேசர்களின் முன்னோடியான flannelled ஜாக்கெட்டுகள் முதன்முதலாகப் பயன்படுத்தினர். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விக்கெட் கீப்பரான Thomas Lockyer, முதல்முறையாக `கிரிக்கெட் கோட்' அணிந்து கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய டிரெண்டை அறிமுகப்படுத்தினார்.

Old Cricket Team

1860-களில் வெள்ளை நிற ஆடைகள், படிப்படியாக வண்ணங்கள் பெற ஆரம்பித்தன. ஆனால், பேட்டர்ன் அளவில் மட்டுமே இந்த மாற்றம். அதாவது, வெள்ளைச் சட்டையில் ஸ்ட்ரைப், செக்டு போன்ற பேட்டர்ன்களை பிரின்ட் செய்து அணியப்பட்டது. ஒவ்வோர் அணியும் வெவ்வேறு டிசைன்களை வடிவமைத்து உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். சட்டையில் மட்டும் வேற்றுமைகளைப் பின்பற்றிய இவர்கள், நாளடைவில் முழுக் கால்சட்டையின் நிறங்களிலும் வித்தியாசத்தைப் புகுத்தினர். 1985-ம் ஆண்டு வரையில் மட்டுமே வெவ்வேறு வண்ணங்களில் ஆன உடையை அணிந்தனர். அதன் பிறகு, வெள்ளை நிற ஆடையே பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதையே உலகளவில் அனைவரும் பின்பற்றவும் செய்தார்கள். வெள்ளை நிறத்துக்காகவே இதை `ஜென்டில்மேன் விளையாட்டு ' என்று கெளரவப்படுத்தப்பட்டது.

White Sweaters

19-ம் நூற்றாண்டின் இறுதியில், முறைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சீருடை அனைவராலும் பின்பற்ற ஆரம்பித்தது. விரைவிலேயே, மென்மையான வெள்ளை நிற தொப்பி, ரப்பர் பூட்ஸ், ஸ்லீவ்லெஸ் ஸ்வெட்டர் போன்றவை வடிவமைக்கப்பட்டன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரர்களின் நலனை மனதில்கொண்டு ஹெல்மெட், வெவ்வேறு நிறத்திலான சீருடை, ஸ்பைக் ஷூ, ஸ்கின்-சூட்ஸ், கூலர்ஸ் போன்றவற்றை கிரிக்கெட் உலகம் அறிமுகம் செய்தது. இதன் பிறகே ஒவ்வோர் உலகக்கோப்பைக்கும் வித்தியாசச் சீருடைகளை அறிமுகம் செய்து உடுத்த ஆரம்பித்தனர். அவற்றில் இந்திய சீருடைகளின் பரிணாம வளர்ச்சியைப் பாப்போம்.

Indian jersey

1985-ம் ஆண்டு இந்திய அணி, வெள்ளைச் சீருடையிலிருந்து நீலம் மற்றும் மஞ்சள் நிற ஸ்ட்ரைப்டு ஜெர்ஸிக்கு மாறியது. ஸ்பான்ஸர் பெயர், எண்கள் போன்ற எந்தவித வாக்கியமும் இல்லாமல் எளிமையான ஜெர்ஸியாக இது இருந்தது. 1992-ல், நேவி அல்லது அடர்ந்த நீல நிற டீ-ஷர்ட்டின் தோள்பட்டைகளில் மல்டிக்கலர் ஸ்ட்ரைப் பேட்டர்ன் டிசைன் செய்யப்பட்ட ஜெர்ஸியைத் தேர்வுசெய்தது இந்தியா. இந்தச் சமயத்தில்தான் சர்வதேச அணிகளுக்கு வெவ்வேறு நிறத்திலான சீருடைகளை வழங்க ஆரம்பித்தது கிரிக்கெட் குழு.

Worldcup jersey

1996-ல் மஞ்சள் நிற காலர், வானவில் வண்ணத்திலான அம்புகளை ஸ்லீவ்களிலும் சட்டையின் மேல் பகுதியிலும் பதித்த லைட் ப்ளூ ஜெர்ஸி பின்பற்றப்பட்டது. இந்த பேட்டர்ன், சிறியளவு மாற்றங்களுடன் 1999-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இது, மஞ்சள் வண்ணப் பறவையை சட்டையில் பதித்தது போன்ற தோரணை தரும்விதமாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. 2003-ம் ஆண்டு, இந்திய அணி மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. முன்பு பயன்படுத்தப்பட்ட மஞ்சள் நிறம், கறுப்பு நிறத்தால் நிரப்பப்பட்டது. இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தை ஜெர்ஸியில் பதித்து அதன் மேல் மஞ்சள் நிறத்தில் `INDIA' என்று பொறிக்கப்பட்டு, முற்றிலும் வித்தியாசத் தோற்றத்தைப் பெற்றது. டிராக் பேன்ட்டுகளிலும் மூவர்ணத்தைப் பதிந்திருந்தது.

Worldcup

2007-ம் ஆண்டு, மூவர்ண பேனல் ஜெர்ஸியின் ஓரத்தில் மாற்றப்பட்டு, நீல நிறத்தின் அடர்த்தி குறைக்கப்பட்டது. வித்தியாச ஃபான்ட்டில் `INDIA' என்று பதிக்கப்பட்டது. முழங்காலில் சிறிய பேட்ச் ஒன்றை இணைத்து முற்றிலும் ஃபேன்சி ரகமாகவே இந்த ஜெர்ஸி இருந்தது. 2011-ம் ஆண்டின் ஜெர்ஸி நிச்சயம் இந்திய மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும். அடர்ந்த நீல வண்ண ஜெர்ஸி மற்றும் டிராக் சூட்டில் ஆரஞ்சு நிறம் படர்ந்திருக்கும் இந்தச் சீருடை, பலரின் ஃபேவரிட் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை தன் வசமாக்கிக்கொண்ட `Men in Blue' நொடிகளை மறக்க முடியுமா!

Jersey

2015-ம் ஆண்டின் ஜெர்ஸி மிகவும் ஸ்பெஷல். 33 சதவிகித ஜெர்ஸி மற்றும் டிராக் பேன்ட், பிளாஸ்டிக் பாட்டிலின் மறுசுழற்சியால் தயாரிக்கப்பட்டது. ஆரஞ்சு வண்ணத்தில் `INDIA' என்று பொறிக்கப்பட்ட இந்த ஜெர்ஸி மிகவும் எளிமையாகவே இருந்தது. 2019-ன் உலகக்கோப்பை உடைகளை பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய அணிகள் மட்டுமே இதுவரை வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்திய அணியின் உடை என்னவாக இருக்கும் என்கிற விவாதம் ஒருபுறம் இருக்க, சிலர் ஆரஞ்சு வண்ணத்தில் ஜெர்ஸியை வடிவமைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

இவற்றில் உங்களின் ஃபேவரிட் ஜெர்ஸி எது? இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஜெர்ஸி நிறம் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்!


டிரெண்டிங் @ விகடன்