``இந்த இரு அணிகளை வீழ்த்தி விட்டால், கோப்பை நமக்குத்தான்” - சுரேஷ் ரெய்னா உறுதி! | Suresh raina talks about India Pakistan match

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (01/06/2019)

கடைசி தொடர்பு:10:15 (01/06/2019)

``இந்த இரு அணிகளை வீழ்த்தி விட்டால், கோப்பை நமக்குத்தான்” - சுரேஷ் ரெய்னா உறுதி!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் குறித்தும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியபோட்டி குறித்தும் பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா. 

ரெய்னா

உலகக்கோப்பை போட்டிகள் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றன. இந்திய அணி வரும் 5-ம் தேதி தனது முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

இந்த நிலையில் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா, இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்துப் பேசியிருக்கிறார். தற்போது வரை ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தியது கிடையாது. இந்தச் சாதனை இம்முறையும் தொடர வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்தியா பாகிஸ்தான்

சுரேஷ் ரெய்னா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,  ``இந்திய அணியில் இருக்கும் எந்த வீரரும் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சிந்திக்க மாட்டார்கள். காரணம் அதற்கு முன்னால் நடக்க இருக்கும் போட்டிகள் முக்கியம். தொடக்க ஆட்டங்களைச் சிறப்பாக விளையாடி வென்றுவிட்டால், இந்திய அணிக்குப் பாகிஸ்தான் போட்டி ஒரு விஷயமாக இருக்காது. 

ஆனால், ஒருவேளைத் தொடக்க ஆட்டங்களில் நாம் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மீது அழுத்தம் அதிகமாகும். அதனால் தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெறுவது முக்கியம். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை சாதனை தொடரும். பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியாது. 

இந்திய அணியின் தேர்வு சிறப்பாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்த லீக் ஆட்டத்தில் அனைத்து அணிகளும் 9 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதனால் சிறப்பான தொடக்கம் கிடைப்பது அவசியம். இந்த உலகக் கோப்பையில் கேப்டன் கோலி இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார். தோனியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். அவர் இந்திய அணிக்காக நிறைய செய்திருக்கிறார். அணியிலிருக்கும் அனுபவ வீரரும் அவரே. 

தோனி

இந்தத் தொடரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலமான அணிகளாகத் தெரிகின்றன. இந்த இரண்டு அணிகளை இந்திய அணி வீழ்த்திவிட்டால் இந்தியா உலகக்கோப்பையை வெல்வதை வேறு எந்த அணியாலும் தடுக்க முடியாது. இங்கிலாந்து அணிக்கு ஆர்ச்சரின் வரவு பெரிய ப்ளஸ். அவர் களத்தில் சிறப்பாகச் செயல்படுகிறார். 

இங்கிலாந்து

என்னைப் பொறுத்தவரையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தத் தொடரில் அவர்கள் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக விளையாடுகிறார்கள். போட்டி நடக்கும் நாளில் அவர்களின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எந்தப் போட்டியையும் வெல்லும் திறன் கொண்டவர்கள்” என்றார்.  

சுரேஷ் ரெய்னா கணிப்பின்படி இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலமான அணிகளாக உள்ளன. உங்களில் கணிப்புகளின்படி நடப்பு தொடரில் பலமான அணியாக எந்த அணியைக் கருதுகிறீர்கள்?