ஆப்கனை கரை சேர்த்த மிடில் ஆர்டர்... வெற்றியை உறுதி செய்த வார்னர் அதிரடி! | Australia vs Afghanistan world cup match report

வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (02/06/2019)

கடைசி தொடர்பு:16:19 (02/06/2019)

ஆப்கனை கரை சேர்த்த மிடில் ஆர்டர்... வெற்றியை உறுதி செய்த வார்னர் அதிரடி!

ஆப்கனை கரை சேர்த்த மிடில் ஆர்டர்... வெற்றியை உறுதி செய்த வார்னர் அதிரடி!

எப்படி போனதோ அப்படியே திரும்பியிருக்கிறது ஆஸி. கம்மின்ஸ், ஜம்பா தலா மூன்று விக்கெட் வீழ்த்தி பெளலிங்கில் அசத்த, வார்னர் தன் இயல்பான ஆட்டத்திலிருந்து விலகி அட்டகாசமான ஒரு இன்னிங்ஸ் ஆடி கைகொடுக்க, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா. #WorldCup2019

#WorldCup2019

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் இறங்கியது. ஆஸ்திரேலியாவின் பெளலிங் அட்டாக்கை பற்றித் தெரிந்திருந்தும் முதலில் பேட்டிங் களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்குத் தொடக்கத்திலேயே சரிவு. மிச்செல் ஸ்டார்க் பழைய மிச்செல் ஸ்டார்க் இல்லை. கன்சிஸ்டன்சி இல்லை. லைன் அண்ட் லென்த் கன்னாபின்னாவென இருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முகமது சேஷாத்தை அவர் போல்டாக்கிய அந்த ஒரு பந்து போதும், இந்தத் தொடர் முழுவதும் மிச்செல் ஸ்டார்க் மீது ஒரு கண் வைத்திருக்க..! ஆஸ்திரேலியாவின் பெளலிங்கை இவர் மட்டும்தான் சமாளிப்பார் என்று எதிர்பார்த்தபோது, சேஷாத் அவுட்டானது அதிர்ச்சியளித்தது. அவரைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் ஹஸ்ரத்துல்லாவும் பெவிலியன் திரும்ப 6/2 எனத் தடுமாறத் தொடங்கியது ஆப்கானிஸ்தான்.

பலமான பேட்டிங், பெளலிங் காம்பினேஷனைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த சரியான வியூகம் வேண்டும். 300+ ஸ்கோர் செய்தால் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி தர முடியும். பாகிஸ்தான், இலங்கையைப் போல ஆப்கானிஸ்தானும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிவிடும் என்றே கணித்தார்கள். அது பொய்யானது. 200+ ஸ்கோர் தேவை என்பதை உணர்ந்திருந்த ரஹ்மத்தும், ஹஷ்மத்துல்லாவும் மெதுவாக இன்னிங்ஸ் பில்ட் செய்யத் தொடங்கினர். 

#WorldCup2019

பொதுவாக சேஸிங்கில்தான் வெற்றி பெறுவதற்கான போராட்டம் இருக்கும். ஆனால், முதல் இன்னிங்ஸிலேயே ஆப்கானிஸ்தான் போராடத் தொடங்கியது. ஆஸ்திரேலியா போன்ற பலமான அணியை எதிர்த்து விளையாடுவதும், அந்த அனுபவம் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களின் பேட்டிங்கில் வெளிப்படுத்தினர். ஹஷ்மத்துல்லா, ரஹ்மத் கூட்டணி 51 ரன்கள் சேர்க்க ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் ஆடம் ஜம்பா. ஷார்ட் கவரில் நின்றிருந்த ஸ்மித் பிடித்த சூப்பர் கேட்ச்சால் ரஹமத் வெளியேற, அடுத்த ஓவரில் விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஹஷ்மத்துல்லாவும் பெவிலியன் திரும்பினார். முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய முகமது நபி ரன் அவுட்டாக 77/5 என மீண்டும் தடுமாறியது ஆப்கானிஸ்தான்.

கேப்டன் குலாப்தின், நஜிபுல்லா ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. அதில், நஜிபுல்லா அரை சதம் கடந்து அசத்தினார். குறிப்பாக ஜம்பா வீசிய 29-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் பறக்கவிட்ட நஜிப், பிரிஸ்டோலில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குக் காரணமானார். இந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் எடுக்க, முதல் இன்னிங்ஸின் காஸ்ட்லியான ஓவரானது. 33-வது ஓவரின் முடிவில் 160 ரன்கள் எடுத்திருந்த ஆப்கானிஸ்தானுக்கு ஒரே ஓவரில் அடுத்த சரிவு. ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில், குலாப்தின், நஜிப் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். இந்தக் கூட்டணி இன்னும் 10 ஓவர்களுக்கு நின்றிருந்தால் ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் மேலும் உயர்ந்திருக்கும். இருப்பினும், ரஷித் கானின் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் ரன் சேர்க்க 50 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது ஆப்கானிஸ்தான்.

#WorldCup2019

ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரகுமான் எனப் பலமான சுழற்பந்து அட்டாக் vs ஆஸ்திரேலியா பேட்டிங் என்பதைக் கணக்கிடும்போது எப்படியும் போட்டி சீக்கிரம் முடிந்துவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 207 ரன்களை அடிக்க ஆஸ்திரேலியா அணி 34.5 ஓவர்களை எடுத்துக்கொண்டது.

ஹமித் ஹாசன் - 6-15-0 (எகானமி 2.50)

ஆஸ்திரேலியாவுக்கு ஓப்பனிங் களமிறங்கிய ஆரோன் ஃபின்ச், வார்னர் ஜோடி நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டது. விக்கெட் எடுப்பதற்கான முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும், ஹமித் ஹாசன் எனும் பெளலரை வைத்து ஸ்கோரை கட்டுக்குள் வைக்கத் திட்டமிட்டார் கேப்டன் குலாப்தின். அந்தத் திட்டம் வொர்க் அவுட்டானது. ‘ராக்கி ஸ்டைல் ஹெட் பேண்டு’ அணிந்து கொண்டு 145 kmph வேகத்தில் மிரட்டும் இந்தப் புது பெளலர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலியாவின் சேஸிங்கிற்கு நெருக்கடி கொடுத்தார்.

#WorldCup2019

ஹமித் ஹாசனின் ஓவர்களைத் தவிர்த்து மற்ற பெளலர்களின் ஓவர்களில் ரன் சேர்த்த ஃபின்ச், வார்னர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தது. 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த ஃபின்ச் குலாப்தின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் நின்ற வார்னர் 114 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

`பால் டேம்பரிங்’ பிரச்னை முடிந்து, தடை முடிந்து, டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பி விட்டார். ஆனால், அந்த `Cheater’ நிழல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, இங்கிலாந்தில்... ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து, ஸ்மித், வார்னர் எங்கு சென்றாலும், அவர்களைப் பார்த்து ஊளையிடுகிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். வார்ம் அப் போட்டியில் அந்தச் சத்தத்தை நிராகரித்து ஸ்மித் சதம் அடித்தார். நேற்று, பிரிஸ்டரில் வார்னருக்கு எதிராகவும் அந்தச் சத்தம் கேட்டது.  எல்லாவற்றையும் கடந்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. 

ஓராண்டு இடைவெளிக்குப் பின் ஒருநாள் போட்டிக்குத் திரும்பியிருக்கிறார் வார்னர். ஆனால், ஐபிஎல் உட்பட பல டி20 போட்டிகளில் எளிதாக ரன் குவித்திருந்தார். அதனால், வார்னர் அடித்து நொறுக்குவார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆரம்பத்தில் அவர் தடுமாறினார். அதை போட்டி முடிந்த பின் அவரே ஒப்புக்கொண்டார். 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு கண்டம் தப்பினார். செகண்ட் ஸ்லிப் இருந்திருந்தால், இல்லை ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்தவரே இன்னும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், ஹசன் பந்தில் அப்போதே நடையைக் கட்டியிருப்பார் வார்னர். சான்ஸ் கிடைத்த பின், ரொம்பவே நிதானமாக ஆடினார். இது அவரது இயல்பும் அல்ல. ஒருவழியாக அரைசதம் கடந்தபின், வெற்றி உறுதி எனத் தெரிந்தபின்பே, நார்மல் மோடுக்கு மாறினார். ஆஸி வென்றது.

இது விஷயமல்ல, 114 பந்துகளில் 89 ரன்கள் அடித்திருந்தார் டேவி. அதில் 8 பவுண்டரிகள். ஒரு சிக்ஸர் கூட இல்லை. பழைய வார்னர் எனில் இவ்வளவு பந்துகளைச் சந்தித்ததற்கு ரன்ரேட் எங்கேயோ போயிருக்கும். தேவைப்பட்டால் என்னால் எப்படி வேண்டுமானாலும் விளையாட முடியும் என நிரூபித்திருக்கிறார். அதை பிரிஸ்டல் நகரிலிருந்து தொடங்கியிருக்கிறார். இங்கிலாந்தின் மற்ற நகரங்களிலும் இது தொடரும் என எதிர்பார்க்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்