`விலகும் முடிவை மாற்றிய எனது ஹீரோவின் போன் கால்!”  - சச்சின் ஷேரிங்ஸ் |  Sachin shares about the 2007 WC

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (03/06/2019)

கடைசி தொடர்பு:14:52 (03/06/2019)

`விலகும் முடிவை மாற்றிய எனது ஹீரோவின் போன் கால்!”  - சச்சின் ஷேரிங்ஸ்

2007 -ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர், தான் என்ன மனநிலையில் இருந்தேன் என்பதுகுறித்து லண்டனில் மனம்திறந்து பேசியுள்ளார், சச்சின் டெண்டுல்கர்.

சச்சின்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல சர்ப்ரைஸ் ஆட்டங்கள், தொடரின் தொடக்கத்திலேயே நடந்துவருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கும் உலகக் கோப்பை தொடருக்குமான மோசமான ராசி, இந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடர்கிறது. முதல் போட்டியில், மண்ணின் மைந்தர்களின் அணியான இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய தென்னாப்பிரிக்கா, நேற்றைய ஆட்டத்தில் வங்க தேசத்திடம் தோல்வியைச் சந்தித்து, அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. 

தென்னாப்பிரிக்கா

ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் இந்துபோன்ற அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெறும். சிறிய அணிகளாகக் கணிக்கப்பட்ட அணிகள், கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்படும் அணிகளைத் தோற்கடித்த வரலாறுகள் இருக்கின்றன. இந்திய ரசிகர்களுக்கும் இப்படியான மோசமான வரலாறு இருக்கிறது. இந்திய ரசிகர்கள் யாரும் 2007 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை மறந்திருக்க முடியாது. இந்திய அணி, வங்கதேசத்துடன் தோல்வியைச் சந்தித்து வெளியேறுகிறது. 

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சினும் அந்தத் தொடரில் இந்திய அணிக்குக் கைகொடுக்கவில்லை. விளையாடிய 3 போட்டிகளில், 64 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தத் தொடர் அவரை மிகவும் பாதித்ததாகவும், ஓய்வுபெறும் எண்ணத்தைத் தொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

2007 -ம் ஆண்டு உலகக் கோப்பை

இதுதொடர்பாக 'இந்தியா டுடே' பத்திரிகைக்குப் பேசும்போது சச்சின்,  ``அந்த காலகட்டத்தில் எல்லாம் முடிந்துவிட்டதாகக் கருதினேன். அப்போது, இந்திய கிரிக்கெட்டைச் சுற்றி பல விஷயங்கள் நடைபெற்றுவந்தன. ஆனால், எதுவுமே நல்லதாக நடக்கவில்லை. அப்போது, அணியில் சில மாற்றங்கள் நடக்க வேண்டும். அந்த மாற்றம் நடக்காதபட்சத்தில், நான் அணியிலிருந்து விலகும் முடிவில் இருந்தேன். கிட்டத்தட்ட 90% விலகும் மூடுக்கு வந்துவிட்டேன். அப்போது எனது சகோதரர் என்னிடம்,  `2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மும்பையில் அந்த அழகான கோப்பை உன் கையில் இருப்பதை நினைத்துப்பார்’ என்றார்.

விவியன் ரிச்சர்ட்ஸ்

அதன்பிறகு, நான் எனது பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போதுதான், ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸிடம் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள், சுமார் 45 நிமிடங்கள் பேசினோம். அப்போது அவர் என்னிடம், இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் இருப்பதாகத் தெரிவித்தார். அது எனக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது. காரணம், பேட்டிங்கில் எனக்கு ஹீரோ அவர். அவரிடமிருந்து வந்த அழைப்பு என்னைப் பெரிய அளவில் மாற்றியது. அந்தக் கணத்திலிருந்து எனது ஆட்டம் முன்பைவிட சிறப்பாக மாறியது” என்றார். 
அவரது சகோதரர் சொன்னது போலவே மும்பையில் கோப்பை, இந்திய அணி வசம் வந்தது.