`அன்று பும்ரா சொன்ன வார்த்தை..!’ - பந்துவீச்சை நிறுத்தியதற்கான ரகசியத்தை உடைத்த கோலி! | Kohli shares the reason behind his break in bowling

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (04/06/2019)

கடைசி தொடர்பு:11:47 (04/06/2019)

`அன்று பும்ரா சொன்ன வார்த்தை..!’ - பந்துவீச்சை நிறுத்தியதற்கான ரகசியத்தை உடைத்த கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை நிறுத்தியதற்கான காரணம் தொடர்பாக இங்கிலாந்தில் பேசியிருக்கிறார். 

கோலி

Photo Credit:Sportskeeda

உலகக் கோப்பைத் தொடரில், இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை நாளை சந்திக்கிறது. மூன்றாவது போட்டியில் விளையாடும் தென்னாப்பிரிக்கா, இன்னும் ஒரு வெற்றியைக்கூட பதிவுசெய்யவில்லை. வெற்றியுடன் தொடரைத் தொடங்க இந்தியாவும் முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் நோக்கில் தென்னாப்பிரிக்காவும் மோதவுள்ளன. இதனால், இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

விராட்

 கடந்த 2017 -ம் ஆண்டுக்குப் பின்னர், இந்திய அணியின் கேப்டன் கோலி சர்வதேச போட்டிகளில் பந்துவீசவில்லை. கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். பேட்டிங்கில் கில்லியான கோலி, பந்துவீச்சிலும் கலக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டவர். இதனை அவரே சொல்லியிருக்கிறார்.  

தனது பந்துவீச்சு தொடர்பாகப் பேசிய கோலி,  ``நான் டெல்லி அகாடமியில் பயிற்சி பெற்றபோது, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ஆக்‌ஷனில் பந்து வீச முயல்வேன் . பின்னாள்களில், அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தபோது, இதனை அவரிடம் சொல்லியும் இருக்கிறேன். அப்போது இருவரும் சிரித்துக்கொண்டோம். 

நான் 2017 -ம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதில்லை. அது ஒரு  இலங்கைத் தொடர். அந்தப் போட்டியில் அனைத்தையும் நாங்கள் வென்றுவிட்டோம். அந்த நிலையில், நான் தோனியிடம் சென்று பந்து வீசலாமா எனக் கேட்டேன்.  அவரும் அனுமதித்தார். நான் பந்து வீசத் தயாராகும்போது, எல்லையில் இருந்த பும்ரா,  `இது வேடிக்கை(Joking) அல்ல.... சர்வதேசப் போட்டி. ’ என சத்தமாகச் சொன்னார். அதன்பின்னர்  எனக்கும் சில முதுகுப் பிரச்னை இருந்தது. அதனால், பந்து வீசுவதில்லை” என்றார். 

பும்ரா

 தனது வீரர்களுக்கு, தன் பந்துவீச்சின்மீது நம்பிக்கை கிடையாது. ஆனாலும் தனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது பயிற்சியின்போது, தொடர்ச்சியாக வலைப்பயிற்சிகளில் கோலி பந்துவீசும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். அதுவும்,  இங்கிலாந்து வலைப்பயிற்சியில் அவர் புது ஆக்‌ஷனில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.