``இவர்களையா அனுப்புவீர்கள்?” - இந்திய அணியின் சந்திப்பைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்!  | New controversy in Indian press meet

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (04/06/2019)

கடைசி தொடர்பு:14:39 (04/06/2019)

``இவர்களையா அனுப்புவீர்கள்?” - இந்திய அணியின் சந்திப்பைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்! 

இந்திய வீரர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பை பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளனர். இது, தற்போது சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.  

ரவி சாஸ்திரி - கோலி

ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களின்போது... வீரர்கள், கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வது வழக்கம். அதுவும் இந்திய அணி தனது முதலாவது போட்டியை விளையாட 2 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பயிற்சியாளர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், நேற்று நடைபெற இருந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு வலைப் பயிற்சியில் வீரர்களுக்குப் பந்துவீசுவதற்காக  இங்கிலாந்து வந்திருந்த கலீல் அகமது, ஆவேஷ் கான் மற்றும் தீபக் சஹார் ஆகியோர், போட்டி தொடங்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் குறைந்தபட்சம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால், அணியில் சம்பந்தப்பட்ட மற்ற வீரர்கள் அல்லது உதவி ஊழியர்களாவது வந்திருக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த சந்திப்பையும் புறக்கணித்தனர். 

ரவி சாஸ்திரி

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய அணி நிர்வாகத்தின் ஊடக மேலாளர், ``வலைப் பயிற்சியில் பந்துவீசுவதற்காக வந்தவர்களில் தீபக் சஹார் மற்றும் அவேஷ் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். அதன் காரணமாக, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அம்மூவரும் அனுப்பப்பட்டனர்'' என்றார். மேலும், `போட்டி இன்னும் தொடங்காத நிலையில், அணியில் சம்பந்தப்பட்ட வீரர்களோ மற்ற ஊழியர்களோ கலந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பத்திரிகையாளர்கள், ``அப்படி என்றால் இந்தச் சந்திப்பை நடத்தாமல் தவிர்த்திருக்கலாமே. அணியில் இல்லாத இவர்கள் அணிக்காக எப்படிப் பேச முடியும்'' என்றனர். 

இந்திய அணியின் கேப்டன் கோலி

பயிற்சியின்போது கோலிக்கு ஏற்பட்ட காயம், ரோஹித் ஷர்மாவுக்கு கையில் அடிப்பட்டது, பும்ரா ஊக்கமருந்து சோதனை என அவர்கள் பல்வேறு விஷயங்கள்குறித்து பேசவேண்டியுள்ளது. இந்த நிலையில், இன்னும் முக்கிய வீரர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருப்பது நல்லதல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

கடந்த உலகக் கோப்பை தொடரின்போதும் ஒரு சர்ச்சை கிளம்பியது. அப்போது கேப்டனாக இருந்த தோனி, அனைத்துப் போட்டிகளுக்குப் பின்னரும் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆனால், அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், பிசிசிஐ டிவி-க்குதான் பேசினார். இதனை அப்போதே மற்ற பத்திரிகையாளர்கள் எதிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த முறை இன்னும் தொடர் தொடங்காத நிலையில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.