சவுதாம்ப்டன் நகரிலும் சென்னை தோசா கடை!- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தஞ்சம் | Chennai Dosa with Indian cricketers in Southampton

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (04/06/2019)

கடைசி தொடர்பு:16:45 (04/06/2019)

சவுதாம்ப்டன் நகரிலும் சென்னை தோசா கடை!- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தஞ்சம்

லகக் கோப்பையில் நாளை இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் முதல் போட்டியில் விளையாடுகிறது. சவுதாம்ப்டன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி தென்னாப்பிரிக்க அணிக்கு 3-வது ஆட்டம். ஆனால், இந்தியாவுக்கு முதல் போட்டி. மே 30-ம் தேதி இங்கிலாந்தையும் ஜூன் 2-ம் தேதி வங்கதேச அணியையும் எதிர்த்து விளையாடி தென்னாப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் தலா இரு போட்டிகளில் ஆடிவிட்டன. இது என்ன விதமான ஷெட்யூல் என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு. அதாவது, உலகக் கோப்பைத் தொடர் தொடங்கி 6 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் கூட களம் காணவில்லை. இதன் பின்னணியில் இருப்பது பி.சி.சி.ஐ.தான். 

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

இந்திய அணிக்கு விதிகள் வகுத்துக்கொடுத்துள்ள லோதா கமிட்டி ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் குறைந்தது 15 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டி மே 12-ம் தேதி முடிவுற்றது. முதலில் மே 19-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் வகையில் ஐபிஎல் அட்டவணை தயாரிக்கப்பட்டது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மே 12-ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் வகையில் அட்டவணை மாற்றப்பட்டது. இந்திய வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பதற்காக உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கான ஆட்டங்களைச் சற்று தள்ளி வைக்குமாறு பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி யிடம் கோரிக்கை வைத்தது. கிரிக்கெட் உலகில் சர்வ வல்லமை படைத்த பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டால் நிராகரிக்க முடியுமா? செவி சாய்த்து இந்திய அணிக்கான போட்டிகளை ஐ.சி.சி தள்ளி வைத்தது. 

சென்னை தோசை கடையில் இந்திய வீரர்கள்

முன்னதாக ஜூன் 2-ம் தேதி வங்கதேச அணியுடன் இந்தியா விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்திய அணிக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைத்துள்ளது. மே 22-ம் தேதியே இங்கிலாந்து சென்றடைந்து விட்ட இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடும் வகையில் தன்னை தயார்படுத்தி வருகிறது. இங்கிலாந்து மண்ணில் செட்டில் ஆக, இந்திய அணிக்கு கிட்டத்தட்ட13 நாள்கள் அவகாசம் கிடைத்துள்ளது. 

சென்னை தோசைக்கடை

தற்போது, சவுதாம்ப்டன் நகரில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள் இரவு டின்னருக்கு வெளியே சென்றால், அங்கேயுள்ள சென்னை தோசா கடைக்குச் சென்று தோசையை ஒரு பிடி பிடிக்கிறார்கள். தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஒரு படி மேலே போய் சென்னை தோசா கடையின் ரெகுலர் கஸ்டமர் ஆகி விட்டார்கள். எங்க போனாலும் நம்ம ஊரு தோசை நமக்கு கிடைச்சுருதுனு இருவரும் தோசையை சாப்பிட்டுத் தள்ளுகிறார்களாம். உலகக் கோப்பை செய்திகளை எடுக்க சவுதாம்ப்டன் நகருக்குச் சென்றுள்ள இந்திய செய்தியாளர்களும் இந்த தோசைக் கடையில் குவிந்து வருகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க