`செஞ்சூரியனில் நிதானம் ; ஸ்டூவர்டை வெளுத்தது ’- யுவி குறித்து அக்தர் ஷேரிங்ஸ் | His six sixes against Stuart Broad was unbelievable says Akthar

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (12/06/2019)

கடைசி தொடர்பு:07:20 (12/06/2019)

`செஞ்சூரியனில் நிதானம் ; ஸ்டூவர்டை வெளுத்தது ’- யுவி குறித்து அக்தர் ஷேரிங்ஸ்

2011 உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.  தேசங்களைக் கடந்து பல்வேறு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங்குடன் தாங்கள் விளையாடிய நாள்களை நினைவுகூர்ந்தனர்.  

யுவராஜ்

ரசிகர்களால் `ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் அக்தர், யுவராஜ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் யுவராஜ் சிங் ஒரு ராக் ஸ்டா, மேட்ச் வின்னர் இதையெல்லாம் தாண்டி அவர் என்னுடைய மிகச்சிறந்த நண்பர். யுவராஜ் சிங் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவரைப் போன்ற ஒரு நளினமான இடதுகை பேட்ஸ்மேனை இன்னும் இந்தியா உருவாக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். 

கிரிக்கெட் வீரராக யுவராஜ் சிங் தன்னுடைய கவனத்தை ஈர்த்த தருணத்தை இதில் நினைவுகூர்ந்துள்ளார்.  2003 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 273 ரன்கள் எடுத்தது.  இந்தப்போட்டியில் இந்திய அணி ரன் வேகம் சீராக சென்றுகொண்டிருந்தபோது டெண்டுல்கர் 98 ரன்களில் அவுட்டானார்.  அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது.  டிராவிட்டுடன் இளம்வீரர் யுவராஜ் கரம் கோத்தார். இன்னும் ஒரு விக்கெட் இழந்தாலும் வெற்றி பெறுவது சிக்கலாகிவிடும். பின்னால் வரும் வீரர்கள் அனைவரும் பந்துவீச்சாளர்கள். பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தருக்கு இந்த விக்கெட்டுகளை வீழ்த்துவது அவ்வளவு கடினமாக இருக்காது. இதை உணர்ந்து விளையாடிய டிராவிட் -யுவராஜ் இணை இந்திய அணியின் வெற்றியை உறுதியாக்கியது. யுவராஜுக்கு அப்போது வயது 21 தான்.

அக்தர்

யுவராஜின் அந்த ஆட்டம் தன்னை வெகுவாக கவர்ந்ததாக அக்தர் கூறியுள்ளார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நான் முதன்முறையாக 2003-ம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த உலகக்கோப்பை போட்டியில்தான் யுவராஜுக்கு எதிராக விளையாடுகிறேன். அந்தப் போட்டியில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. போட்டி முடிந்து அவரிடம் சென்று பேசினேன். நான் வியந்துவிட்டேன். கிரிக்கெட் குறித்து மிக ஆழமாக தெரிந்து வைத்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட்டில் யுவராஜ் அடித்த அந்த 6 சிக்ஸர்களை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பிளின்டாப், யுவியை சீண்டிச்செல்ல சம்பந்தமே இல்லாமல் சிக்கினார் ஸ்டூவர்ட் பிராட். அவரது எல்லா பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டினார் யுவி. ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் என பிரமிக்க வைத்தார். அந்தப்போட்டியில் 12 பந்துகளில் யுவராஜ் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

யுவராஜ்

ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் அடித்த 6 சிக்ஸர்கள் என்னால் நம்பவே முடியவில்லை. நான் அப்படி ஒரு ஆட்டத்தை அதுவரை பார்க்கவில்லை. அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். நாட்டுப்பற்று மிக்க இந்தியர். அவர் எப்போது வெற்றி பெற வேண்டும் என்பதையே விரும்புவார். லோ ஆர்டரில் களமிறங்கும் அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பார். எனவே, நாங்கள் அவரது விக்கெட்டை வீழ்த்துவதை முக்கியமானதாகக் கருதுவோம். ஏனென்றால் அவர் ஒரு மேட்ச் வின்னர். அவரது எதிர்காலம் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறேன் என அக்தர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.