``கிரிக்கெட் கிட்டை கட்டிக்கொண்டு அழுத யுவி!'' - கணவர் குறித்து மனம் திறந்த ஹேசல் கீச் | I didn’t understand the emotion when yuvi crying'- says Keech

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (12/06/2019)

கடைசி தொடர்பு:10:37 (12/06/2019)

``கிரிக்கெட் கிட்டை கட்டிக்கொண்டு அழுத யுவி!'' - கணவர் குறித்து மனம் திறந்த ஹேசல் கீச்

சுமார் 17 ஆண்டுக்காலம் இந்திய அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் தற்போது ஓய்வு அறிவித்துள்ளார்.  2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் கோப்பையை வெல்ல யுவராஜின் ஆட்டமே இந்திய அணிக்குப் பக்க பலமாக இருந்தது. யுவராஜ் சிங்தான் இந்தியாவுக்காக நம்பர்-4 ல் களம் இறங்குவார்.  

யுவராஜ்

தற்போது வரை அந்த பொஷிசனில் ஆடுவதற்கு இந்தியாவுக்குச் சரியான வீரர் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். யுவராஜின் தந்தை யோகராஜ் இந்திய அணிக்காக ஆடியவர். சிறு வயதில் இருந்து தந்தை கொடுத்த பயிற்சியால்தான் யுவராஜால் இந்தளவுக்கு ஜொலிக்க முடிந்தது. இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது தாயார் ஷபனம் சிங் கொடுத்த தைரியத்தாலும் ஆதரவாலும்தான் அவரால் அதிலிருந்து மீள முடிந்தது. தற்போது யுவராஜின் பெற்றோர் பிரிந்துவிட்டனர். தாயார் ஷபனம் சிங்குடன் யுவராஜ் வசிக்கிறார். 

பெற்றோருக்கு அடுத்ததாக மனைவிதானே எல்லாம். யுவராஜுக்கு மனைவியாக அமைந்தவர் ஹேஷல் கீச். யுவராஜ் ஓய்வு அறிவித்த நாளில் மேடையில் ஹேசல் சீச்சும் ஷபனம் சிங்கும் இருந்தனர். யுவராஜின் ஓய்வு குறித்து கீச் கூறுகையில், ``மனைவியாக அவருக்கு இந்த விஷயத்தில் நான் முழு ஆதரவு கொடுக்கிறேன். யுவியை சந்திப்பதற்கு முன் நான் கிரிக்கெட் விளையாட்டைக்கூட பார்த்தது இல்லை. 2014-ம் ஆண்டு யுவிக்கு இந்திய அணியிடம் இருந்து கிரிக்கெட் கிட் அனுப்பப்பட்டது. அப்போது, கிட்டைக் கட்டிக்கொண்டு அவர் அழுததை நான் பார்த்தேன். என்னால் அந்த வலியை உணர முடியவில்லை. தேசிய அணிக்காகத் தேர்வு செய்யப்படும்போது கிடைக்கும் அலாதி மகிழ்ச்சியை கிரிக்கெட்டர்களால் மட்டுமே உணர முடியும் '' என்றார். 

யுவராஜ் மற்றும் கிரிக்கெட் கிட்

யுவராஜ் தாயார் ஷபனம் சிங், ``கிரிக்கெட் என் மகனுக்குப் பணம், புகழ் எல்லாவற்றையும் அளித்தது. முக்கியமான கிரிக்கெட் தொடர்களில் கோப்பையை வென்ற அணியில் யுவி இடம் பிடித்துள்ளார். ஒரு தாயாக மகனின் முடிவுக்கு ஆதரவளிப்பது என் கடமை'' என்று தெரிவித்தார். 

இந்திய அணி 2000-ம் ஆண்டுகளில் உருவாக்கிய நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். இனிமேல், கனடா லீக்,  யூரோ டி20 போட்டிகளில் விளையாட யுவராஜ் முடிவு செய்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க