"இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம்தான்!"- ரவிச்சந்திரன் அஸ்வின் | Cricketer ashwin believes india would perform extraordinarily well in 2019 wc

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (12/06/2019)

கடைசி தொடர்பு:20:10 (12/06/2019)

"இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம்தான்!"- ரவிச்சந்திரன் அஸ்வின்

"2003, 2007 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம்செலுத்தியது போல இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம் இருக்கும்" என்று சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர், " சாஹல், குல்தீப்  யாதவ் ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளைப் பெறும். கண்டிப்பாக மூன்றாவது முறையாக இந்திய அணி கோப்பையை வெல்லும்"என்றார்.

அஷ்வின்  #CWC19

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு, இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் 'அஸ்வின் ஃபவுண்டேஷன்' அமைப்பின் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. சென்னையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்ட போட்டித் தேர்விலிருந்து திறமையான 8 இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்களின் கல்வி, விளையாட்டுச் செலவுகளை ஏற்றுள்ள அஸ்வின் ஃபவுண்டேஷன், அவர்களுக்கான பிரத்யேக கிரிக்கெட் பயிற்சியையும் வழங்க உள்ளது.

அஷ்வின் பவுண்டேஷன்

"என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்தில், பயிற்சிக்குத் தேவையான பொருள்களை வாங்கவே மிகவும் சிரமப்பட்டோம். எனினும், பெற்றோரின் ஆதரவால் தொடர்ந்து கிரிக்கெட்டில் ஈடுபட முடிந்தது. இப்போது, இந்த அமைப்பின் மூலம் சிறந்த கிரிக்கெட் வீரர் வீராங்கனைகளின் விளையாட்டுப் பயணத்தை சிறப்பாக்கும் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.  கிரிக்கெட்டை  பொறுத்தவரை இன்னும் வீராங்கனைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. ஆர்வமிருக்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்குப் பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும்" என்றார் அஸ்வின்.