``அஃப்ரிடி கன்னத்தில் அறைந்ததும் உண்மையை ஒப்புக்கொண்டார்!'' - யாரைச் சொல்கிறார் ரஸாக் | Amir conceded spot-fixing truth after getting slapped by Shahid Afridi- says abdul .Razzaq

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (13/06/2019)

கடைசி தொடர்பு:14:27 (13/06/2019)

``அஃப்ரிடி கன்னத்தில் அறைந்ததும் உண்மையை ஒப்புக்கொண்டார்!'' - யாரைச் சொல்கிறார் ரஸாக்

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கடந்த 2011- ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டு நீண்டகால தடைக்குப் பிறகு, மீண்டும் உலகக் கோப்பையில் களம் இறங்கிய, முகமது அமீர் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பையில் சிறப்பாகப் பந்து வீசி வரும் முகமது அமீர் ஸ்பாட் ஃபிக்கிங்கில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகள் தடையைச் சந்தித்தவர். 

அப்ரிடியால் கன்னத்தில் அறையப்பட்ட முகமது அமீர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் ஸ்பாட் ஃபிக்சிங்கின்போது நடந்த விஷயங்களை இப்போது வெளியே கூறியிருக்கிறார். அதில்,  ''அமீர் மீது புகார் எழுந்ததும் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கேப்டன் சாகித் அப்ரிடியை சந்திக்க வந்தார். அப்போது நானும் அப்ரிடியின் அறையில் இருந்தேன். என்னைப் பார்த்து, அப்ரிடி அறையைவிட்டு வெளியே போகச் சொன்னார். நான் அறையைவிட்டு வெளியே வந்ததும் கன்னத்தில் அறை விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து, முகமது அமீர் மளமளவென உண்மையை ஒப்புக்கொண்டார். 

இந்த விஷயத்தைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையாகக் கையாளவில்லை. ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே நடவடிக்கை எடுத்திருக்கலாம். டேவிட் வார்னர், ஸ்மித் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்ததுபோல, ஒரு ஆண்டுக் காலம் வரை தடை விதித்து விஷயத்தை முடித்திருக்கலாம். ஆனால், தேவையில்லாமல் ஐ.சி.சி வரை பிரச்னையைக் கொண்டு சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகளவில் பெயரை கெடுத்துக்கொண்டது. 

சல்மான் பட் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டுப் பிடிபடுவதற்கு முன்பே, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. டாட் பந்தை அடித்து சல்மான் அவுட் ஆனார். அப்போதே நான் அப்ரிடியிடம், 'ஏதோ தவறு நடக்கிறது' என்று கூறினேன். அதற்கு, 'அப்படியெல்லாம் இருக்காது. தவறான யூகம்' என்றார் அப்ரிடி.

ஆனால், மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான டி-20 போட்டியில் சல்மான் பட்டின் ஆட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. சல்மான் பட் சிங்கிள் ரன் எடுத்துவிட்டு எனக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டுமென்பது அணியின் வியூகம். சல்மான் வகுத்த வியூகத்துக்கு எதிராக விளையாடத் தொடங்கினார். 2, 3 பந்துகள் ஆடிவிட்டே எனக்கு ஸ்ட்ரைக் தந்தார். இதனால், ஏற்பட்ட அழுத்தம் காரணமாக நான் விரைவில் அவுட் ஆனேன்' என்று அப்துல் ரஸாக் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க