உலகக் கோப்பைக்குப் பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! - வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்தியா | west Indies and India plays World Test Championship

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (13/06/2019)

கடைசி தொடர்பு:16:15 (13/06/2019)

உலகக் கோப்பைக்குப் பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! - வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்தியா

 உலக டெஸ்ட்

இங்கிலாந்தில் தற்போது, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. மழையின் குறுக்கீடு காரணமாக  3 போட்டிகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  உலகக் கோப்பை தொடர், வரும் ஜூலை 14-ம் தேதியோடு நிறைவுபெறுகிறது.  இந்தத் தொடரையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இத்தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 3 டி-20, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.  உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்காக இந்தியா கலந்துகொள்ளும் முதல் போட்டி இதுவாகும். இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்குகிறது.

டி-20 வருகைக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்களிடம் குறையத் தொடங்கியுள்ளது. ஆஷஸ் ஒரு பாரம்பர்யமிக்க தொடர் என்பதால், அந்தத் தொடரின்போது மட்டுமே மைதானங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. மற்ற போட்டியின்போது, மைதானம் வெறுமனே காட்சியளிக்கிறது.  பல அணிகள், டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடுவதில்லை. டி-20 தாக்கம் ஒருநாள் தொடரில் நன்கு பிரதிபலிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடிகாட்டுகின்றனர். ஒரு நாள் தொடர்களில் தற்போது, 300 ரன்கள் எல்லாம் சாதாரணமாக அடிக்கிறார்கள். மக்களும் குறைந்த ஓவர்கள்கொண்ட போட்டிகளைப் பார்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். டெஸ்ட் தொடரை ஊக்குவிக்கும் விதமாக,  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் 9 அணிகள் மோதுகின்றன.  2019-ல் தொடங்கும் இந்த டெஸ்ட் தொடர், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளில், தொடர்ச்சியாக இந்த அணிகள் 6 தொடர்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடும். இந்தத் தொடரில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணி, உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வெல்லும்.