`அனுமதி மறுத்தும் கேட்கவில்லை!' - பேட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சச்சின் | Sachin Tendulkar sues on spartan sports

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (14/06/2019)

கடைசி தொடர்பு:18:05 (14/06/2019)

`அனுமதி மறுத்தும் கேட்கவில்லை!' - பேட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சச்சின்

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2013-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக உள்ளார். இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மட்டும் வர்ணனை செய்துகொண்டு அவ்வப்போது இந்திய அணிக்கு சில ஆலோசனைகளை வழங்கியும் வருகிறார். இப்படியிருக்க ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார் சச்சின். 

சச்சின்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் (Spartan Sports) என்ற நிறுவனம். இது குறிப்பிட்ட சில விளையாட்டு உபகரணங்களைத் தயாரித்து விற்பனை செய்வது வருகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்நிறுவனத்தின் பேட்டைதான் பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் தற்போது இந்நிறுவனத்தின் பேட்டைதான் பயன்படுத்தி வருகிறார். 

ஸ்பார்டன் பேட்டுடன் தோனி

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினின் புகைப்படம் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தின் பொருளை விளம்பரப்படுத்துவதற்கு அவரிடம் அனுமதி கோரியுள்ளது. இரண்டு வருட ஒப்பந்தத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடி தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் தனது புகைப்படத்தை ஸ்பார்டன் நிறுவனம் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

ஸ்பார்டன்

அந்நிறுவனமும் கடந்த இரண்டு வருடங்களாக தாங்கள் தயாரிக்கும் கிரிக்கெட் பேட்டுகளை லண்டன், இந்தியா போன்ற பெரிய வணிகச் சந்தையில், சச்சின் பெயரை வைத்து விற்பனை செய்துள்ளது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு தரவேண்டிய தொகை இன்னும் வரவில்லை என அந்நிறுவன அதிகாரிகளிடம் மிகவும் பணிவாகப் பேசியுள்ளார். அவரின் கேள்விக்கு நிறுவனம் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. 

சச்சின்

தொடர்ந்து அந்நிறுவனத்துடன் சச்சின் போட்டுக்கொண்ட ஒப்பந்த காலமும் முடிந்துள்ளது. அதன் பிறகும் சச்சின் புகைப்படத்தை வைத்துத் தொடர்ந்து விளம்பரம் செய்து வந்துள்ளனர். அதுவரை ஒரு ரூபாய் கூட அவருக்கு வழங்கவில்லை. இதில் கடுப்பான சச்சின் டெண்டுல்கர், பணத்தைத் தராமல் தன்னை ஏமாற்றியதாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சச்சின் தொடர்ந்த வழக்கால் ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.