வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (26/06/2013)

கடைசி தொடர்பு:09:54 (26/06/2013)

விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச், செரீனா

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2வது நாளான நேற்று (25ஆம் தேதி) ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் புளோரியன் மேயருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 8ஆம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ 6-2, 7-5, 6-1 என்ற நேர் செட்டில் ஸ்பெயின் வீரர் அல்பெர்ட் ரமோசை வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த மான்டி மினெல்லாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 20 நிமிடங்களில் வசப்படுத்திய செரீனா, 2வது செட்டில் 0-2 என்று பின்தங்கினார். அதன் பிறகு மேலும் ஆக்ரோஷம் காட்டிய செரீனா, ஆட்டத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

முடிவில் செரீனா 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து அவர் பிரான்சின் கரோலின் கார்சியாவுடன் மோதுகிறார்.

சீன வீராங்கனை லி நா 6-1, 6-1 என்ற நேர் செட்டில் நெதர்லாந்தின் கிராஜிசெக்கை தோற்கடித்தார். 10ஆம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மரிய கிரிலென்கோ, தரவரிசையில் தன்னை விட 28 இடங்கள் பின்தங்கிய இங்கிலாந்து வீராங்கனை லாரா ராப்சனை சந்தித்தார். இதில் கிரிலென்கோ 3-6, 4-6 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார்.

ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், இத்தாலியின் ராபர்ட்டா வின்சி உள்ளிட்டோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

இந்திய ஜோடி வெளியேற்றம்

தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த இந்தியாவின் புராவ் ராஜா-திவிஜ் ஷரண் ஜோடி, ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் நிகோலஸ் மோன்ரோ (அமெரிக்கா)-சிமோன் ஸ்டாட்லர் (ஜெர்மனி) இணையுடன் மோதியது.

முதல் இரு செட்டை 7-6 (4), 6-2 என்ற வீதம் கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த 3 செட்டுகளை 3-6, 4-6, 4-6 என்று வரிசையாக இழந்து வெற்றியையும் கோட்டை விட்டது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்