வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (04/07/2013)

கடைசி தொடர்பு:12:03 (04/07/2013)

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், டெல் போட்ரோ

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு ஜோகோவிச், டெல் போட்ரோ முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (3ஆம் தேதி) நடந்த காலிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச், 7ஆம் நிலை வீரர் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-6 (5), 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து ஜோகோவிச், தொடர்ந்து 13வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதியை எட்டியிருக்கிறார்.

இதே போல் 8ஆம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ, 4ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் டேவிட் பெர்ரருடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல் போட்ரோ 6-2, 6-4, 7-6 (5) என்ற நேர் செட்டில் பெர்ரரை வீழ்த்தினார்.

ஆட்டத்தின் போது கீழே விழுந்து, கால் முட்டி வலியால் அவதிப்பட்ட டெல் போட்ரோ, சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடி வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றவரான டெல் போட்ரோ, விம்பிள்டனில் அரையிறுதி சுற்றில் காலடி எடுத்து வைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரையிறுதியில் அவர் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்