கார்ல்சனுக்கு கோப்பை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா! | Jayalalithaa gave prize to World Chess Champion Carlson!

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (25/11/2013)

கடைசி தொடர்பு:16:03 (25/11/2013)

கார்ல்சனுக்கு கோப்பை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா!

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 9.90 கோடி ரூபாய் பரிசு வழங்கி கெளரவித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''முதலமைச்சர் ஜெயலலிதா  8.4.2013 அன்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2013 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர்  போட்டி, ஐந்து முறை உலக வாகையர் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், 2012 ஆம் ஆண்டிற்கான உலக சதுரங்க வாகையருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போதைய உலகத்தர வரிசையில் முதல் சதுரங்க வீரராகவும், பிடே தரவரிசைப் பட்டியலில் இதுவரை உயர்ந்த அளவில் 2872 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ள நார்வே நாட்டைச் சார்ந்த மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையே நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்தார்.


சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 7.11.2013 அன்று  2013 ஆம் ஆண்டிற்கான பிடே உலக சதுரங்க வாகையர் போட்டியினை  முதலமைச்சர் ஜெயலலிதா  துவக்கி வைத்தார்.

மேக்னஸ் கார்ல்சன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருக்கு இடையேயான 2013 ஆம் ஆண்டிற்கான உலக சதுரங்க வாகையர் போட்டியின், முதல் சுற்று 9.11.2013 அன்று தொடங்கியது. முதல் நான்கு சுற்றுகளில் சமநிலை ஏற்பட்டு தலா 0.5 புள்ளிகள் வீதம் இருவரும் 2 புள்ளிகள் பெற்றனர். ஐந்தாம் சுற்று மற்றும் ஆறாம் சுற்றுகளில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று 4-2 என்ற புள்ளிகள் அளவில் முன்னிலை பெற்றார்.

ஏழாம் சுற்று மற்றும் எட்டாம் சுற்றுகளில் சமநிலை ஏற்பட்டு 5-3 என்ற அளவிலும், ஒன்பதாம் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று 6-3 என்ற புள்ளிகள் என்ற நிலையிலும், பத்தாவது சுற்றில் இருவரும் சமநிலை பெற்றதன் அடிப்படையில் மேக்னஸ் கார்ல்சன்  6.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.

சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலை நிறுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற  2013 ஆம் ஆண்டிற்கான உலக சதுரங்க வாகையர் போட்டியில் வென்ற நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன்னுக்கு நீலகிரி மலைச் சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

இந்தப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வெள்ளிப் பதாகையும், 40 சதவீத பரிசுத் தொகையான 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி பாராட்டினார். உலக சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் கிர்சான் இல்யும் ஷினோவ், மேக்னஸ் கார்ல்சனுக்கு தங்கப் பதக்கமும், விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வெள்ளி பதக்கமும் வழங்கினார் " என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்