வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (15/07/2014)

கடைசி தொடர்பு:12:33 (15/07/2014)

தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் அல்ல: மரடோனா

ரியோடி ஜெனீரோ: தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் அல்ல என்று முன்னாள் அர்ஜென்டினா வீரர் மரடோனா கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்லாததால் அவரும் ஏமாற்றத்துடன் அந்த விருதை பெற்றார்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி இந்த போட்டித் தொடரில் 4 கோல்கள் அடித்து இருந்தார். 4 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று இருந்தார். இறுதிப்போட்டியில் அவர் கோல் அடிக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே.

இந்நிலையில் தங்க பந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை என்று அர்ஜென்டினாவை சேர்ந்த முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ''தங்க பந்து விருது மெஸ்சிக்கு கொடுத்து இருக்கக்கூடாது. வர்த்தக ரீதியில் இருப்பவர்களின் விருப்பத்துக்காக அவருக்கு சிறந்த வீரர் விருது கொடுக்கப்பட்டது. இதற்கு அவர் தகுதியானவர் இல்லை. மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கியது நியாயமற்றது இதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் அந்த விருதை வாங்கி இருக்கக்கூடாது.

இந்த போட்டித் தொடரில் அதிக கோல்களை அடித்த கொலம்பிய வீரர் ரோட்ரிசுக்குத்தான் தங்க பந்து விருதை வழங்கி இருக்க வேண்டும். அர்ஜென்டினாவைவிட, ஜெர்மனி சிறப்பாக விளையாடியது. 2வது இடத்தை பிடித்ததன் மூலம் அர்ஜென்டினாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது" என்றார்.

மரடோனா தலைமையில் 1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றது. அப்போது அவர் ‘கோல்டன் பால்’ விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்